தியோங் பாரு அருகேயுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் மின்சாரக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தீயில் ஓர் அறை முழுதாக எரிந்துவிட்டது.
பூன் தியோங் ரோடு, புளோக் 2Aஇல் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) நடந்த அந்தத் தீச்சம்பவம் குறித்துப் பிற்பகல் 1.30 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சென்றபோது 10வது மாடியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கரும்புகை வெளிவந்ததைக் காணமுடிந்தது.
“வீட்டின் ஓர் அறையில் இருந்த பொருள்களால் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைத்தனர். சம்பவத்தின்போது வீட்டில் எவரும் இல்லை,” என்று அது தெரிவித்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை வீடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் கிட்டத்தட்ட 20 பேர் வெளியேற்றப்பட்டனர். எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
பாதிக்கப்பட்ட அறையில் ஏற்பட்ட மின்சாரக் கோளாற்றினால் தீ மூண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தம் 1,954 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன. இது, 2022 ஆம் ஆண்டு நிகழ்ந்த 1,799 தீச்சம்பவங்களைவிட 8.6 விழுக்காடு அதிகமாகும். இவற்றில், குடியிருப்புக் கட்டடங்களில் 970 தீச்சம்பவங்கள் நடந்துள்ளன. 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட 935 தீச்சம்பவங்களிலிருந்து இது 3.7 விழுக்காடு அதிகம்.
தீச்சம்பவங்களுக்கான முதல் இரண்டு காரணங்களாக மின்சாரக் கோளாறும் சமையல் அடுப்பைக் கவனிக்காமல் விட்டதும் கூறப்பட்டன. மின்சாரக் கோளாற்றால் 597 தீவிபத்துகளும் சமையல் அடுப்பைக் கவனிக்காமல் விட்டதால் 456 தீச்சம்பவங்களும் நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் புள்ளிவிவரங்கள் காட்டின.
மேலும், 2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க 2023ல் தீக்காயங்கள் 171லிருந்து 81ஆகவும் உயிரிழப்புகள் எட்டிலிருந்து மூன்றாகவும் குறைந்தன.
மின்சாரத்தால் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்க, மின்னூட்டு இணைப்புகளில் (power sockets) அளவுக்கு அதிகமான மின்கருவிகளைப் பொருத்துவதைத் தவிர்க்குமாறும் பயன்பாட்டில் இல்லாதபோது மின்சாதனங்களை அணைத்து வைக்குமாறும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
மின்கலன்கள் அல்லது சாதனங்களை நீண்ட நேரம் அல்லது இரவு முழுவதும் கவனிப்பின்றி மின்னூட்டம் செய்ய விட்டுவிடக்கூடாது.
மின்கம்பிகளின் நிலையையும் தவறாமல் சரிபார்க்க வேண்டும். மேலும் பழுதடைந்த அல்லது விரிசல் அடைந்த மின்கம்பிகளை உடனடியாக மாற்றவோ பழுதுபார்க்கவோ வேண்டும்.
மின்கம்பிகளைத் தரைவிரிப்பு அல்லது பாய்களின்கீழ் வைக்க வேண்டாம் என்றும் வெப்பமான மேற்பரப்புகளிலிருந்து அவற்றை விலக்கி வைக்கவேண்டும் என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

