வாட்டர்லூ ஸ்திரீட் அருகே காப்பிக்கடையில் தீ; 10 பேர் பாதிப்பு

வாட்டர்லூ ஸ்திரீட் அருகே காப்பிக்கடையில் தீ; 10 பேர் பாதிப்பு

1 mins read
0a031340-61b5-4caf-a5e9-828bfa543358
குவீன் ஸ்திரீட் வீவக புளோக் 269Bல் இச்சம்பவம் நிகழ்ந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குவீன் ஸ்திரீட்டில் உள்ள காப்பிக்கடையில் வியாழக்கிழமை (மார்ச் 19) காலையில் தீ மூண்டது.

புகையை சுவாசித்ததால் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்த காப்பிக் கடை, வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள பிரபல குவான் இம் தோங் ஹுட் சோ ஆலயத்துக்கு அருகே அமைந்துள்ளது.

குவீன் ஸ்திரீட்டில் உள்ள, வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 269Bயிலிருந்து 20 பேரைக் காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் வெளியேற்றினர்.

புகையை சுவாசித்தது, மூச்சுத் திணறல் ஆகியவற்றால் 10 பேர் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டது. அவர்களில் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

வியாழக்கிழமை காலை 11.15 மணியளவில் தீ குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் இரண்டு குழாய்களைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது.

காப்பிக் கடையின், அசுத்தக் காற்றை வெளியேற்றும் குழாய்க்கும் தீக்கும் தொடர்பு இருப்பதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீ மூண்டதற்கான காரணத்தை அறிய விசாரணை தொடர்வதாகவும் அது குறிப்பிட்டது.

அடுப்புகள், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள், அசுத்தக் காற்றை வெளியேற்றும் குழாய்கள் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்துக்கொண்டு தீ மூளாமல் பார்த்துக்கொள்ளுமாறு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, மக்களை அதிலும் குறிப்பாகக் கடைகளை நடத்துவோரைக் கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்