பூன் கெங் வீவக வீட்டில் தீ; 140 பேர் வெளியேற்றம்

பூன் கெங் வீவக வீட்டில் தீ; 140 பேர் வெளியேற்றம்

படம்: ஷான் லோ/ஃபேஸ்புக்

17 Nov 2026 - 12:39 pm

2 mins read

பூன் கெங் ரோட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் திங்கட்கிழமை (நவம்பர் 16) ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்ததுடன் 140 பேர் அக்கட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அன்றைய தினம் மாலை 4.50 மணிக்கு புளோக் 8 பூன் கெங் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் நடந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.

அந்தக் கட்டடத்தின் 23வது மாடிவீட்டின் படுக்கை அறையில் தொடங்கிய தீயைக் குடிமைத் தற்காப்பு படை அதிகாரிகள் குழாயைக் கொண்டு தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைத்தனர்.

பாதுகாப்புக் கருதி, அக்கட்டடத்திலிருந்து ஏறத்தாழ 140 பேர் வெளியேற்றப்பட்டனர்.

அந்த வீட்டில் இருந்த ஒருவர் கறும்புகையைச் சுவாசித்த காரணத்தால் பாதிக்கப்பட்டு, குடிமைத் தற்காப்பு படை அதிகாரிகள் அங்கு வந்துசேர்வதற்கு முன்பே சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ, தீ விபத்து குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இரவு 8.11 மணிக்கு பதிவிட்டார். குடிமைத் தற்காப்பு படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்த எட்டு நிமிடங்களில் அவர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்ததாக திரு லோ விவரித்தார்.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் குடியிருப்பாளர் வலைத்தளக் குழுத் தலைவர் அவரது வீட்டில் இருந்ததாகவும், அவருடைய மகன்களுடனும் அண்டைவீட்டாருடனும் சேர்ந்து அங்கிருந்த குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படும் நடவடிக்கையில் உதவியதாகவும் திரு லோ தெரிவித்தார். வெளியேற்றப்பட்டோரில் இரு கைக்குழந்தைகளும் அடங்கும் என்று அவர் மேலும் பதிவிட்டார்.

குடியிருப்பாளர் வலைத்தளக் குழுவின் நிலையம் உடனடியாகத் திறந்துவிடப்பட்டு, நிலைமை வழக்கநிலைக்குத் திரும்பும் வரை அங்கு பலர் தற்காலிகமாகக் காத்திருந்தனர்.

நல்ல வேளையாக யாருக்கும் மோசமான காயங்கள் ஏற்படவில்லை என்று அவர் ஆறுதல் அடைந்தார்.

கொட்டும் மழையிலும் முன்னின்று உதவிய குடிமைத் தற்காப்பு படை அதிகாரிகளுக்கும் முதலுதவி வழங்கியோருக்கும் திரு லோ நன்றி தெரிவித்துக்கொண்டார்.

நகர மன்றம், வீடமைப்பு வளர்ச்சிக் கழக ஊழியர்கள் அங்கு உதவி வழங்க தயார் நிலையில் இருப்பதாகவும் தேவையான அனைத்து ஆதரவும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்