ராஃபிள்ஸ் கல்விக்கழக வளாகத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் திங்கட்கிழமை (ஜனவரி 5) மூண்ட தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஷானில் அமைந்துள்ள அதன் நிர்வாகக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அலுவலகத்தில் உள்ள பொருள்கள் தீக்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
தீச்சம்பவம் குறித்துப் பிற்பகல் 12.30 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர். தீயினால் வீடமைப்பு வளர்ச்சிக் கழக ஐந்தறை வீட்டின் பரப்பளவிலான பகுதி பாதிக்கப்பட்டதாகச் சீன மொழி நாளிதழான சாவ்பாவ் தகவல் வெளியிட்டுள்ளது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும் தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை தொடர்வதாகவும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

