செம்பவாங்கில் உள்ள இரண்டு மாடி கடைவீடு ஒன்றில் தீ மூண்டதை அடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ள கடைவீடுகளிலிருந்து ஏறத்தாழ 100 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவம் புதன்கிழமையன்று (ஜனவரி 8) நிகழ்ந்தது.
10A ஜாலான் தம்பாங்கில் உள்ள கடைவீடு தீப்பற்றி எரிவதாக இரவு 8.25 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
கடைவீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த நிலையில், தீயணைப்புப் படையினர் உள்ளே நுழைந்து தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
அருகில் உள்ள கடைவீடுகளுக்குத் தீ பரவாமல் இருக்க வெளியிலிருந்தும் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.
தீயணைப்புப் பணிகளில் ஏறத்தாழ 40 தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர்.
எட்டு அவசரகால வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
தீயணைப்புப் படையினர் ஈசூன் தீயணைப்பு நிலையம், உட்லண்ட்ஸ் தீயணைப்பு நிலையம், தெம்பனிஸ் தீயணைப்பு நிலையம், சிறப்பு நடவடிக்கைப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
கடைவீட்டில் தீ கொழுந்துவிட்டு எரிவதைக் காட்டும் காணொளி டிக்டாக் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
சம்பவ இடத்தில் தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் பலர் இருந்ததைக் காணொளியில் காண முடிந்தது.
ஒரு மணி நேரத்துக்குள் தீ அணைக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.