தோ பாயோ வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் வெள்ளிக்கழமை (ஆகஸ்ட் 22) அதிகாலை தீ மூண்டது.
அதில் காயமுற்ற மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தோ பாயோ லோரோங் 5 புளோக் 63ன் 12வது தளத்தில் உள்ள வீட்டில் தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. தீ குறித்து அதிகாலை 2.30 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.
வீட்டுக்குள் தாங்கள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாகவும் வீட்டின் வசிப்பறையில் தீ எரிந்துகொண்டிருந்ததாகவும் அது கூறியது. தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீ அணைக்கப்பட்டது.
தீயணைப்பு நடவடிக்கையின்போது தீயணைப்பாளர்கள் ஒருவரை வீட்டின் சமையலறையிலிருந்து மீட்டனர். அவர் புகையை நுகர்ந்ததுடன் தீக்காயங்களுக்கு ஆளானது தெரியவந்தது. சுயநினைவுடன் இருந்த நிலையில் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவ்வீட்டின் அண்டை வீடுகளில் இருந்த மேலும் இருவரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மூச்சுத் திணறாலால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் மூட்டுக் காயத்துக்கு ஆளான மற்றொருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
தீ மூண்டதற்கு நடுக்கூடத்தில் இருந்த தனிநபர் நடமாட்டச் சாதனத்துடன் தொடர்பிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.