புளோக் 226, தோ பாயோ லோரோங் 8ல் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை (மே 14) இரவு தீ மூண்டதை அடுத்து, இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அந்த வீட்டின் வரவேற்பறையில் இருந்த தனிநபர் நடமாட்டச் சாதன மின்கலனிலிருந்து தீ மூண்டதாகக் கூறப்பட்டது.
புதன்கிழமை இரவு 10.50 மணியளவில் தீயணைப்பாளர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வியாழக்கிழமை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, 10வது தளத்தில் அமைந்திருக்கும் அவ்வீட்டின் வரவேற்பறையில் தீ எரிந்துகொண்டிருந்தது. புகை சூழ்ந்திருந்த நிலையில் தீயணைப்பாளர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை அணைத்தனர்.
அந்த வீட்டின் படுக்கையறையில் காணப்பட்ட ஒருவர் புகையைச் சுவாசித்ததாலும் தீக்காயங்களாலும் பாதிக்கப்பட்டதாக மருத்துவ உதவியாளர் கூறியதால் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
தீ மூண்ட வீட்டிற்கு அருகில் குடியிருந்த ஏறக்குறைய 30 பேரைக் காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் வெளியேற்றினர்.
வெளியேற்றப்பட்டோரில் 14வது வீட்டில் குடியிருந்த ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இத்தகைய தீச்சம்பவங்களைத் தவிர்க்க, தனிநபர் நடமாட்டச் சாதனங்கள், மின்சைக்கிள்கள் போன்றவற்றின் மின்கலன்களை மிக நீண்ட நேரம் மின்னூட்டம் செய்யவேண்டாம் என்று பொதுமக்களுக்குச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.