வரும் நவம்பர் 1ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெறவுள்ள தீமிதித் திருவிழாவுக்கான முன்பதிவு செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்குகிறது.
தீமிதித் திருவிழா குறித்த கூடுதல் விவரங்களை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்ட இந்து அறக்கட்டளை வாரியம், பால்குடம், அங்கப்பிரதட்சணம், கும்பிடுதண்டம், பூக்குழி இறங்குதல், பூக்குழியை வலம் வருதல் போன்ற வேண்டுதலுக்கு கட்டாயமாக இணையம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டது. முன்பதிவிற்கான இணையத்தள முகவரி: https://heb.org.sg.
செப்டம்பர் 24ஆம் தேதிமுதல் அக்டோபர் 31ஆம் தேதி இரவு 11 மணிவரை இணைய முன்பதிவு திறந்திருக்கும். நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்கான நுழைவுச்சீட்டுகள் கோயில் நேரடியாக விற்கப்படமாட்டா என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.
மூன்று மாத காலம் நடைபெறும் தீமிதித் திருவிழா ஆகஸ்ட் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இணையவழிப் பதிவில் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டால் அது தொடர்பான உதவிக்கு, பக்தர்கள் தங்கள் பதிவுப் பக்கத்தின் படத்துடன் registration@heb.org.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 6593 9201 என்ற எண் வழியாகத் தொடர்பு கொள்ளலாம் (நாள்தோறும் காலை 8 மணிமுதல் இரவு 9 மணிவரை).
பக்தர்கள் தீமிதித் திருவிழாவை இந்து அறக்கட்டளை வாரியத்தின் யூடியூப், ஃபேஸ்புக் வழியாக நேரலையாகக் காணலாம்.
மேல்விவரங்களுக்கு 6223 4064 என்ற எண்ணில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.
