ஈசூனில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் மூண்ட தீயால் பாதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கிட்டத்தட்ட 50 பேர் வெளியேற்றப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீச்சம்பவம், ஈசூன் ஸ்திரீட் 11ல் உள்ள புளோக்கில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) பிற்பகல் மணி 1.20க்கு நடந்ததாக அது ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
குடிமைத் தற்காப்புப் படை, சம்பவ இடத்திற்குச் சென்றபோது இரண்டாம் தளத்தில் உள்ள படுக்கையறையில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. புகை சூழ்ந்த வீட்டுக்குள் நுழைந்து தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைத்தனர்.
குடிமைத் தற்காப்புப் படை செல்லும் முன்னர், வீட்டிலிருந்த மூவர் (பெரியவர் ஒருவரும் இரு பிள்ளைகளும்) வெளியேறிவிட்டனர்.
பிள்ளைகள் இருவரும் புகையைச் சுவாசித்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்புக்காக கே கே மகளிர், குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சேதமுற்ற படுக்கையறையில், எரிந்துகொண்டிருந்த ஒரு பொருளிலிருந்து நெருப்பு பரவியிருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீப்பிடித்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கிறார் துப்புரவு மேற்பார்வையாளர் திருமதி செல்வராணி ராஜேந்திரன். அவர் வீட்டுக்குத் திரும்பியபோது புகை சூழ்ந்திருப்பதைக் கண்டார். சம்பவம் நடந்தபோது அவர் வீட்டில் யாரும் இல்லை. அடுத்த வீட்டில் தீப்பற்றி எரிவதைக் கண்ட அவரும் அங்கிருந்து உடனே வெளியேறினார்.
தீச்சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் அங்கு விரைந்தார் உள்துறை அமைச்சரும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கா சண்முகம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தற்காலிகமாகத் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர். அவர்களின் தேவையைக் கண்டறிந்து, உதவிகள் நல்கப்படும் என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சண்முகம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஈசூன் ஸ்ட்ரீட் 44ல், தனிநபர் நடமாட்டச் சாதனத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட தீச்சம்பவம் நடந்து இரண்டு நாள்களே ஆகியிருக்கும் நிலையில், அண்மைச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதில் நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஏறக்குறைய 40 பேர் அவர்களின் வீடுகளிலிருந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர்.
சிகரெட், மெழுகுவர்த்தி போன்றவை எரிந்துகொண்டிருக்கும்போது அப்படியே விட்டுவிட்டு வெளியே செல்லவேண்டாம் என்றும் கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் குடிமைத் தற்காப்புப் படை மக்களுக்கு நினைவூட்டுகிறது.

