சிங்கப்பூர் போஸ்ட் (SingPost) குழுமத்தில் இருந்து நீக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரியும் தலைமை நிதி அதிகாரியும் எந்தவொரு சுயேச்சை விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று தெரிவித்து உள்ளனர்.
முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் ஃபாங், முன்னாள் தலைமை நிதி அதிகாரி வின்சென்ட் யிக் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அந்த இருவரும் டிசம்பர் 21ஆம் தேதி அவரவர் பொறுப்புகளில் இருந்து நீக்குவதற்குக் காரணமான நிகழ்வுகள் பற்றி சுயேச்சையாக நிபுணத்துவ விசாரணைக்கு சிங்கப்பூர் பங்குவர்த்தக முதலீட்டாளர் சங்கம் (Sias) அழைப்பு விடுத்திருந்தது. அதனை தாங்கள் வரவேற்பதாக நீக்கப்பட்ட இரு அதிகாரிகளும் கூறி உள்ளனர்.
எச்சரிக்கையூட்டும் அறிக்கை மற்றும் நிர்வாகத்திற்கு உட்பட்ட விசாரணையின்கீழ் அவ்விருவரும் நீக்கப்பட்டனர்.
அவர்களுடன், சிங்போஸ்ட்டின் அனைத்துலக வர்த்தகப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த லி யு என்பவரும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அறிக்கை வெளியிட்டுள்ள திரு ஃபாங்கும் திரு யிக்கும் எந்தவொரு சுயேச்சையான விசாரணைக்கும் தயார் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
“இதர ஒழுங்குமுறை அமைப்புகள் அல்லது அரசாங்க அமைப்புகள் விசாரணை நடத்த முன்வந்தால் அதனை வரவேற்று அந்த விசாரணையில் முழுமையாகப் பங்கேற்போம்,” என்று அவ்விருவரும் கூறி உள்ளனர்.
முன்னதாக, சிங்கப்பூர் பங்குவர்த்தக முதலீட்டாளர் சங்கத்தின் தலைவரும் தலைமை அதிகாரியுமான டேவிட் ஜெரல்ட் வியாழக்கிழமையன்று (ஜனவரி 2) ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதில், “சிங்போஸ்டின் மூத்த நிர்வாகக் குழு அதிகாரிகள் மூவர் திடீரெனப் பதவி நீக்கம் செய்யப்பட்டது, அந்நடவடிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் மேல் நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறுவது ஆகிய நிகழ்வுகள் பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், சந்தை ஆகிய தரப்புகளுக்கிடையே முக்கியமான கேள்விகளை எழச் செய்துள்ளன,” என்று தெரிவித்தார்.

