பக்திச் சுடர்விட்ட தீமிதித் திருவிழா

பக்திச் சுடர்விட்ட தீமிதித் திருவிழா

படம்: பே.கார்த்திகேயன்

01 Nov 2026 - 7:18 pm

3 mins read

சிங்கப்பூரின் மிகத் தொன்மையான சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

இது சென்ற ஆண்டைவிட மூன்று விழுக்காடு அதிகம் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது.

முதலாவதாக, மாலை 6.17 மணியளவில் மேளதாளங்களும் ‘ஓம் சக்தி’ எனும் பக்தி முழக்கமும் எட்டுத் திக்கும் ஒலிக்க, தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு சக்தி கரகத்தைத் தலையில் சுமந்தபடி பூக்குழி இறங்கினார்.

முன்னதாக, சக்திக் கரகத்துடன் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்ட தலைமைப் பண்டாரம் உள்ளிட்ட குழுவினரும் பக்தர்களும் நான்கு கிலோமீட்டர் தொலைவு நடந்து ஸ்ரீ மாரியம்மன் கோயிலை அடைந்தனர்.

இம்முறை எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் (எரிசக்தி, தொழில்துறை) டான் சீ லெங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மாலை 5.30 மணியளவில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு வந்த டாக்டர் டான், பூக்குழிக்குப் பொறுப்பு வகிக்கும் தொண்டர்களுடன் உரையாடினார்.

இவ்வாண்டின் தீமிதித் திருவிழாவைத் தொடங்கிவைக்கும் வண்ணம் ஆகஸ்ட் 17ஆம் தேதி கோயிலில் கொடியேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட இதர நிகழ்ச்சிகளும் ஏறத்தாழ மூன்று மாதங்களாக நடைபெற்றன.

கடைசிச் சடங்கான படுகளத்துக்குப் பிறகு காலை 8 மணிமுதல் 50க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் பூக்குழி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 18 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட பூக்குழி அமைக்கப்பட்டது.

தீமிதித் திருவிழாவைக் காணத் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களில் ஒருவரான ராஜேந்திரன் மாலதி, 38, விடிகாலை 5 மணிமுதல் கோயிலில் காத்திருந்ததாகச் சொன்னார். பக்தர்களுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சுமுகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தம் குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண் பக்தர்களும் பூக்குழி இறங்குவதைக் காண்பதற்காக அவர் வந்திருந்தார்.

மேலும், வார இறுதி முழுவதும் நீடிக்கும் திருவிழா உணர்வை அருகில் இருந்தபடி அனுபவிக்க அருகிலுள்ள விடுதியில் தங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

தீமிதித் திருவிழா முடிந்தவுடன் 760 பெண் பக்தர்கள் பூக்குழியை வலம் வந்தனர். அத்துடன், தீமிதித் திருவிழாவையொட்டி 3,900 பால்குட நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட்டன. பெண்களுக்கான கும்பிடுதண்ட நேர்த்திக்கடனை 2,700 பேரும் ஆண்களுக்கான அங்கப்பிரதட்சணத்தை 750 பேரும் நிறைவேற்றினர்.

கிட்டத்தட்ட 360 தொண்டூழியர்கள் கைகோத்துத் தீமிதித் திருவிழாவுக்கான உதவிப் பணிகளில் ஈடுபட்டனர்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாகக் கூட்டக் கட்டுப்பாட்டுப் பணிகளில் தொண்டூழியராகச் சேவையாற்றி வருகிறார் திரு கதிரவன் சந்திரசேகர், 23. அத்துடன், அவர் ஏழு ஆண்டுகளாகப் பூக்குழியும் இறங்கி வருகிறார்.

“தொண்டூழியம் செய்யும் அதே வேளையும் எனக்கும் பூக்குழியில் இறங்க வேண்டும் எனப் பேரார்வம் இருந்தது. இங்குள்ள பக்திச் சூழலும் எனக்குப் பிடித்துள்ளது,” என்றார் அவர்.

இரண்டையும் சமாளிப்பது சோர்வளிக்கும் என்ற அவர், ஆயினும் அதனைச் செய்து முடிக்கும்போது கிடைக்கும் மனநிறைவுதான் ஒவ்வோர் ஆண்டும் தம்மை மீண்டும் இங்கு வரச் செய்வதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு பூக்குழியைக் கவனித்துக்கொள்ளும் பணிக்கான தொண்டூழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வழக்கமாக 45 தொண்டூழியர்களே பூக்குழியைக் கவனித்துக்கொள்வர் என்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் தலைவர் த.வே கிரிதரன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்