தைப்பூச விழாவில் பக்தர்கள் கூட்டம் அலைகடலெனத் திரண்டபோதும் அதில் தனித்துவமாக திகழ்ந்தது முருகப் பக்தரகள் சுமந்த முதற்காவடி.
அவ்வரிசையில் தம் சகோதரர் விக்னேஸ்வரன், 24, முதன்முறையாகக் காவடி சுமப்பதைப் பார்க்க உடன் வந்திருந்தார் மகேஸ்வரி, 28.
பகுதி நேர மாணவி, முழு நேர ஊழியரான இவர், செங்காங் வட்டாரவாசி. தம்பி தனது நேர்த்திக்கடன் குறித்து தெரிவித்தபோது முதலில் நம்ப இயலவில்லை என்று புன்னகைத்தார் அவர்.
‘‘தங்களுக்குப் பிடித்த தெய்வத்திற்காக தம்பி காவடி எடுத்து வருவதைப் பார்க்கையில், பெருமையாக உள்ளது,’’ என்றார் அவர்.
பல ஆண்டுகளாக காவடி எடுக்க வேண்டும் என்று நினைத்து இறுதியாக இந்த ஆண்டு காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்திவிட்டார் வெளிநாட்டு ஊழியர் வேல்முருகன், 32.
‘‘குறிப்பிட்ட வேண்டுதல் ஏதுமில்லை. ஆனால் கடவுளுக்கு நன்றி தெரிவிக்க ரதக் காவடி எடுத்தேன்,’’ என்றார் அவர். உறவுகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் அவர்களிடம் கூறிய பிறகு காவடி எடுக்க முடிவுசெய்ததாகச் சொன்னார். குடும்பத்தினரைவிட்டு இங்கு தனியாக வசிக்கும் நிலையில், தமக்கும் அவர்களுக்கும் முருகன்தான் துணையென்றும் நெகிழ்ச்சியுடன் அவர் சொன்னார்.
இங்குள்ள நண்பர்கள் பலரும் உதவியதால் வேண்டுதலை நினைத்தவாறே நிறைவேற்ற முடிந்தது என்றார் அவர்.
நினைத்தது நடந்ததற்காகவும் இனி நினைப்பதும் நடக்க வேண்டும் என்பதற்காகவும் முதல்முறையாக காவடி தூக்கினார் திரு குமரன் கந்தன் 27.
வேண்டுதல் குறித்து கேட்டபோது அது ரகசியம் என்று சொன்ன திரு குமரன், குடும்பத்தினர் நலனுக்காக உளமார வேண்டியுள்ளதாகக் கூறினார்.
காவடியைச் சுமக்கத் தொடங்கியபோது சற்று பதற்றமாக இருந்தாலும், ஒருபுறம் பக்தி இசை ஒலிக்க, மறுபுறம் பக்தி மணம் கமழ அதற்கு மத்தியில் நடந்து வந்ததால் வலி தெரியவில்லை என்று உறுதியாகக் கூறினார் திரு குமரன்.
தைப்பூசத்தை ஆண்டுதவறாமல் பார்த்து அதில் பங்கேற்றும் வருகின்றார் திரு மகேஷ்வரன் 57. உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வசிக்கும் அவர், இம்முறை முதியோர், உடற்குறையுள்ளோர் உட்பட பல்வேறு தரப்பினருக்காக கோயில் நிர்வாகத்தினரால் செய்யப்பட்ட வசதிகள் மனத்திற்கு நிம்மதி அளிப்பதாக இருந்தன என்றார்.
இம்முறை மருமகன் காவடி எடுப்பதைப் பார்க்க, தம் மாமியாருடன் வந்திருந்தார் திரு மகேஷ்வரன். வரிசையில் நிற்பது, இறைவனைத் தரிசிப்பது உட்பட தைப்பூச ஏற்பாடுகள் பக்தர்களுக்குப் பயனளிப்பதாக உள்ளது என்றும் முதன்முறையாக காவடி எடுக்கும் அனுபவத்திற்கு நிகரேதுமில்லை என்றும் அவர் மனம் மகிழ்ந்தார்.

