சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஐவர் சனிக்கிழமையன்று (நவம்பர் 9) புக்கிட் பாத்தோக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு சிங்கப்பூருக்குள் நுழைய ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.
23 வயது ஆடவர் ஒருவர் தடையை மீறி சிங்கப்பூருக்குள் குடியேறியதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட மற்ற நால்வரிடம் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, பயண ஆவணங்கள் இல்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடவரைத் தவிர்த்து, மற்ற நால்வரும் 27 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்காவுக்கு அருகே இருக்கும் வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை பின்னிரவு 12.25 மணியளவில் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின்போது அந்த ஐவரும் பிடிபட்டதாகக் காவல்துறை கூறியது.
இதுகுறித்த விசாரணை தொடர்கிறது.


