அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதியிலிருந்து அக்டோபர் மாத இறுதி வரை ஐந்து பேருந்துச் சேவைகள் செங்காங் பேருந்து முனையத்திலிருந்து கம்பஸ்வேல் முனையத்துக்கு மாற்றப்படும்.
செங்காங் பேருந்து முனையத்தில் நடைபெறும் புதுப்பிப்புப் பணிகளால் இந்த மாற்றம் இடம்பெறுகிறது.
80, 86, 87, 372, 374 ஆகியவை மாற்றம் காணும் பேருந்துச் சேவைகளாகும். நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனமும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) கூட்டறிக்கையில் இத்தகவலை வெளியிட்டன.
தற்போது மொத்தம் 10 பேருந்துச் சேவைகள் செங்காங் பேருந்து முனையத்திலிருந்து இயங்குகின்றன.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து பல பேருந்து முனையங்கள் கட்டங்கட்டமாகப் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் செங்காங் முனையமும் அடங்கும்.
அடுத்தகட்டப் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட பேருந்துச் சேவைகளை இடம் மாற்றுவது அவசியமாக இருப்பதாகக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பணிகளை மேற்கொள்ளப் பேருந்து முனையத்தின் கூடுதல் பகுதிகள் தேவைப்படுவது அதற்குக் காரணம்.
கூடுமானவரை பயணிகளுக்கான அசெளகரியத்தைக் குறைப்பதற்காகவே பேருந்துச் சேவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
51A கம்பஸ்வேல் ரோட்டில் அமைந்துள்ள கம்ஸ்வேல் பேருந்து முனையம், செங்காங் முனையம் அமைந்திருக்கும் சாலைக்கு நேர் எதிரே உள்ளது.

