சிங்கப்பூரின் பல்வேறு இனங்களைப் பிரதிநிதிக்கும் ஐந்து அமைப்புகள், லீ குவான் இயூ நூற்றாண்டு நிதிக்கு $10 மில்லியனுக்குமேல் நிதி திரட்டியுள்ளன.
சிங்கப்பூர் சீன வர்த்தகத் தொழிற்சபை, சிங்கப்பூர் சீனக் குலவழிச் சங்கங்கள் கூட்டமைப்பு, சிங்கப்பூர் மலாய் வர்த்தகத் தொழிற்சபை, சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபை, சிங்கப்பூர் யுரேஷியர் சங்கம் ஆகிய ஐந்து அமைப்புகளும் இந்த நன்கொடையைத் திரட்டின.
நூற்றாண்டு நிதிக்கு நன்கொடை வழங்க, அல்லது கையொப்பப் புத்தகங்களில் கையெழுத்திட்டு ஆதரவுகாட்ட சிங்கப்பூரர்களையும் சமூகத்தையும் ஒன்றுதிரட்டிய இந்த நிதி திரட்டும் நடவடிக்கைக்காக ஐந்து அமைப்புகளும் முதல்முறையாகக் கூட்டிணைந்து செயல்பட்டன. ‘நிகழ்காலத்திற்கு நன்றி கூறி, எதிர்காலத்தை உருவாக்குவோம்’ என்பது இந்நடவடிக்கையின் தலைப்பு.
ஹில் ஸ்திரீட்டில் உள்ள சிங்கப்பூர் சீன வர்த்தகத் தொழிற்சபை கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், 218,968 கையொப்பங்கள் கொண்ட அட்டைப்பலகை மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கிடம் கொடுக்கப்பட்டது. ஏறக்குறைய $10.2 மில்லியன் தொகைக்கான காசோலை கல்வி அமைச்சர் சான் சுன் சிங்கிடம் கொடுக்கப்பட்டது. துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை அளித்திருந்தார்.
திரு லீ குவான் இயூ பிறந்து இவ்வாண்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, லீ குவான் இயூ நூற்றாண்டு நிதியைத் திரு வோங் மே மாதம் தொடங்கினார். தொழில் தலைவர்கள் அமைத்த இந்நிதிக்கு, மே மாத நிலவரப்படி $82.3 மில்லியன் நன்கொடைகள் திரட்டப்பட்டிருந்தன. கல்வி அமைச்சு அதன் கல்வி நிதியின்கீழ் நூற்றாண்டு நிதியை நிர்வகிக்கிறது.
திரு லீ குவான் இயூ மிகுந்த முக்கியத்துவம் அளித்த நோக்கத்திற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று திரு வோங் தெரிவித்தார்.
கல்வி உபகாரச் சம்பளங்கள், மேம்பாட்டுத் திட்டங்கள், உயர்கல்விக் கழகங்களில் வசதியில்லாத மாணவர்களுக்குக் கூடுதல் ஆதரவு போன்றவற்றுக்கு நிதி பயன்படும் என்றும் அவர் கூறினார்.
திரு லீயின் நூற்றாண்டு நிறைவுநாள், நவீன சிங்கப்பூரின் உருவாக்கத்திற்கு வழிகோலிய விழுமியங்கள், கோட்பாடுகள் ஆகியன பற்றி சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைவதாகத் திரு வோங் குறிப்பிட்டார். அந்த விழுமியங்களில் முக்கியமான ஒன்று பல இனக் கலாசாரம்.
சிங்கப்பூரின் வெற்றிக்கு வழிவகுத்த அடிப்படை விழுமியங்களை நிலைநாட்டும் அதே வேளையில், மாற்றம் அவசியமாக இருக்கும் சூழ்நிலைகளில் மாற்றமடைவதற்கும் சிங்கப்பூர் தயாராக இருக்கவேண்டும் என்று திரு வோங் வலியுறுத்தினார்.


