தெம்பனிஸ் விரைவுச்சாலையில் (டிபிஇ) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) ஐந்து கனரக வாகனங்கள் ஈடுபட்ட சாலை விபத்தில் இருவர் காயமுற்றனர்.
ஒரு ‘டிப்பர் டிரக்’ லாரி, ஒரு ‘பிரைம் மூவர்’ லாரி, மூன்று சாதாரண லாரிகள் விபத்தில் சிக்கின. சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிய பொங்கோல் ரோடு நுழைவாயிலுக்கு அருகே உள்ள தெம்பனிஸ் விரைவுச்சாலைப் பகுதியில் நிகழ்ந்த விபத்து குறித்து தங்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 9.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஒரு லாரியில் இருந்த 34 வயதுப் பயணி ஒருவரும் ‘பிரைம் மூவர்’ லாரியின் 33 வயது ஓட்டுநரும் கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர். காயமுற்ற இருவரும் ஆண்கள்.
மேலும் நால்வருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனைக்குப் போக மறுத்துவிட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
விசாரணையில் இரு ஆண் லாரி ஓட்டுநர்கள் ஒத்துழைத்து வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்களில் ஒருவரின் வயது 33, மற்றொருவரின் வயது 36.
விபத்து காரணமாக தெம்பனிஸ் விரைவுச்சாலையின் இரண்டாம், மூன்றாம், நான்காம் தடங்களைத் தவிர்க்குமாறு நிலப் போக்குவரத்து ஆணையம், வெள்ளிக்கிழமை காலை சுமார் 9.45 மணிக்கு எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.