தொழில்நுட்பக் கல்விக் கழகங்களில் (ஐடிஇ) 2025ஆம் ஆண்டிலிருந்து ஐந்து புதிய பட்டயக் கல்வித் திட்டங்கள் சேர்க்கப்படுகின்றன.
தற்போது தொழில்நுட்பக் கல்விக் கழகங்களில் 48 பட்டயக் கல்வித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
கூடுதல் பட்டயக் கல்வித் திட்டங்கள் வழங்கப்படுவதால் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களில் சேர்ந்து பயின்று சான்றிதழ் பெற்ற மாணவர்களில் கிட்டத்தட்ட 15 விழுக்காட்டினர் 2025ஆம் ஆண்டிலிருந்து ஐடிஇயில் பட்டயக் கல்வியைத் தொடரலாம்.
2023ஆம் ஆண்டில் இந்த விகிதம் 10 விழுக்காடாக இருந்தது.
சமூகப் பராமரிப்பு, அவசரநிலை மருத்துவத் துறை, தூய எரிசக்தி பொறியியல், ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் கல்வி, மனிதவள நிர்வாகம் ஆகியவற்றில் புதிய பட்டயக் கல்வித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
புதிய பட்டயக் கல்வித் திட்டங்கள் குறித்து அக்டோபர் 24ஆம் தேதியன்று, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கல்விக்கான இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் அறிவித்தார்.
வேலை-கல்வி பாதை வாயிலாக திறன்களை மேம்படுத்திக்கொள்ள கூடுதல் மாணவர்களுக்கு ஐடிஇ வாய்ப்பளிக்கும் என்று அவர் கூறினார்.
வேலை-கல்வித் திட்டத்தின்கீழ் 2023ஆம் ஆண்டில் பட்டயச் சான்றிதழ் பெற்றவர்களில் 90 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோருக்கு பட்டயச் சான்றிதழ் பெற்று ஆறு மாதங்களில் முழுநேர வேலை கிடைத்ததை டாக்டர் மாலிக்கி சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஐடிஇயின் வேலை-கல்வித் திட்டத்தின்கீழ் பட்டயச் சான்றிதழ் பெற்றவர்களின் சராசரி மாதாந்திர சம்பளம் $2,850. இது பலதுறைத் தொழிற்கல்லூரியில் முழுநேரம் கல்வி பயின்று பட்டயச் சான்றிதழ் பெற்றவர்கள் வாங்கும் சராசரி மாதாந்திர சம்பளத்துடன் ஒப்பிடக்கூடியதாகும்,” என்று டாக்டர் மாலிக்கி தெரிவித்தார்.
இதற்கு முன்பு ஐடிஇ சான்றிதழ் பெற்றவர்கள் வேலை செய்யத் தொடங்கியபோது அவர்களது சராசரி மாதாந்திர சம்பளம் $2,000ஆக இருந்ததாக அவர் கூறினார்.
புதிய கல்வித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, 2025ஆம் ஆண்டில் 1,700 பட்டயச் சான்றிதழ் மாணவர்களை ஐடிஇ சேர்த்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 1,400ஆக இருந்தது.
வேலை-கல்வித் திட்டம் 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் முழுநேரமாக வேலை செய்துகொண்டே ஐடிஇயில் கல்வி பயில்கின்றனர்.
ஐடிஇ சான்றிதழ் பெற்ற மாணவர்கள் இத்திட்டத்தில் சேரும்போது இரண்டரை ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளில் பட்டயம் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சேர்ந்து பயில்பவர்களில் பெரும்பாலானோர் ஐடிஇயில் கல்வி பயின்று சான்றிதழ் பெற்றவர்கள்.
இத்திட்டம் தொடர்பாகத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் ஏறத்தாழ 900 நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.
அவை மாணவர்களைப் பணியமர்த்தி, வழிகாட்டி, வேலை அனுபவத்தை வழங்குகின்றன.

