வடகிழக்கு பருவமழை, கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட இதுவரை இல்லாத மழைப்பொழிவு காரணமாக, சிங்கப்பூரில் குறைந்தது மூன்று முறை திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
ஆக அண்மைய நிகழ்வாக, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) மாலை பெய்த கனமழையால் டன்யர்ன் சாலை, கிங் ஆல்பர்ட் பார்க் அருகே புக்கிட் தீமா சாலை, பால்மோரல் சாலை உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. அவ்வழியாகச் சென்ற பல வாகனங்களும் வெள்ளத்தில் சிக்கின.
குறிப்பாக, வடகிழக்கு பருவமழையால் சிங்கப்பூரில் நவம்பரில் ஆக அதிக அளவு மழைப்பொழிவு பதிவானது. 2025 ஜனவரி இறுதிவரை பருவமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பருவமழையின் தீவிரத்தை எங்களால் முன்னதாகவே முன்னுரைக்க இயலவில்லை. ஏனெனில், சிங்கப்பூரின் பருவநிலையில் மழைப்பொழிவு திடீரென ஏற்படலாம்,” என்று பொதுப் பயனீட்டுக் கழகத்தின் நீர்பிடிப்பு, நீர்வழித் துறை இயக்குநர் மௌரிஸ் நியோ கூறினார்.
“குறுகிய நேரத்தில் பெய்யும் மிகக் கனமழை, சில வேளைகளில் வடிகால்களின் கொள்ளளவை மிஞ்சலாம். அப்போதுதான் திடீர் வெள்ளம் ஏற்படலாம். அது பொதுவாக ஒரு மணி நேரத்தில் வடிந்துவிடும்,” என்றார் அவர்.
இந்த வட்டாரத்துக்கு மழைப்பொழிவையும் குளிர்ந்த வானிலையையும் கொண்டு வரும் ‘லா நினா’ பருவநிலை நிகழ்வு, இப்போதைக்கும் 2025 மார்ச்சுக்கும் இடையே ஏற்படலாம் என முன்னுரைக்கப்படுகிறது. இதனால், பருவமழைக் காலத்தையும் தாண்டி மழை பெய்யலாம்.
சிங்கப்பூர் தற்போது ‘லா நினா கண்காணிப்பில்’ இருந்து வருவதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வகத்தின் இணையப்பக்கம் குறிப்பிடுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக் காலத்துக்கு முன்னதாக, வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் எனக் கருதப்படும் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் வர்த்தகங்களுக்கும் வெள்ளத் தடுப்பு உபகரணங்களைப் பொதுப் பயனீட்டுக் கழகம் வழங்குகிறது. நவம்பர் தொடக்கத்தின் நிலவரப்படி, ஏறக்குறைய 16,000 உபகரணங்கள் வழங்கப்பட்டன.