ஸ்டீவன்ஸ் சாலை, கிங்ஸ் சாலை உள்ளிட்ட புக்கிட் தீமாவின் பல பகுதிகளிலும் கனமழையால் ஏப்ரல் 20ஆம் தேதி மாலை 5 மணி முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
புக்கிட் தீமா சாலையிலும் கிங்ஸ் சாலையிலும் மாலை 5.05 மணிக்கும் பால்மோரல் சாலை-ஸ்டீவன்ஸ் சாலைச் சந்திப்பில் மாலை 5.20 மணிக்கும் ‘கொரொனேஷன் வாக்’கில் (Coronation Walk) மாலை 5.35 மணிக்கும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) பதிவுசெய்தது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவிசெய்யப் ‘பியுபி’ அதிகாரிகள் அனுப்பப்பட்டதாக அது தெரிவித்தது.
ஸ்டீவன்ஸ் சாலை-பால்மோரல் சாலைச் சந்திப்பிலும் புக்கிட் தீமா சாலையிலும் திடீர் வெள்ளம் தணிந்துவிட்டதாக மாலை 5.40 மணிக்கு பியுபி தன் ‘X’ தளத்தில் பதிவுசெய்தது.
தமிழ் முரசு நிருபர் மாலை சுமார் 5.50 மணியளவில் பால்மோரல் சாலை - புக்கிட் தீமா சாலைச் சந்திப்பைச் சென்றடைந்தபோது போக்குவரத்து நெரிசலாக இருந்தது. அதற்குள் மழை சற்று ஓய்ந்திருந்தாலும் சாலை சந்திப்பையடுத்து சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்ததால் வாகனங்கள் தொடர்ந்து செல்லமுடியாமல் நின்றுவிட்டன. சில மோட்டார்சைக்கிள்களும் சில கார்களுமே கடைசி தடத்தில் மட்டும் சென்றன.
தேங்கியிருந்த நீர் படிப்படியாக வடிய, மாலை 6.10 மணிக்குள் புக்கிட் தீமா சாலையில் போக்குவரத்து வழக்க நிலைக்குத் திரும்பியது.
மாலை 6.10 மணிக்குள் ‘கொரோனேஷன் வாக்’கிலும் 6.20 மணிக்குள் கிங்ஸ் சாலையிலும் வெள்ளம் தணிந்துவிட்டதாகப் பியுபி அறிவித்தது.
சிங்கப்பூரின் வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகளில் கனமழையைப் மாலை 4.25 முதல் 5.30 மணி வரை எதிர்பார்க்கலாம் என தேசிய சுற்றுப்புற வாரியம் அறிவித்ததாகப் பியுபி தன் தளத்தில் மாலை சுமார் 4 மணியளவிலேயே பதிவுசெய்தது.