வெள்ளம்: தாய்லாந்திலிருந்து 822 பேர் பாதுகாப்பாகச் சிங்கப்பூர் திரும்பினர்

1 mins read
பாதிக்கப்பட்ட ஹாட் யாய் நகரிலிருந்து பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியோர் குறித்து அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தகவல்
a47e8b68-fddd-45ce-9df0-366a2ae283be
ஹாட் யாய் நகரிலிருந்து சிங்கப்பூரர்கள் ஏறத்தாழ 600 பேர் தாயகம் புறப்பட்டதாகக் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 28), வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தது. - படம்: விவியன் பாலகிருஷ்ணன்/ஃபேஸ்புக்

அண்மைய வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தாய்லாந்தின் ஹாட் யாய் நகரிலிருந்து சிங்கப்பூரர்கள் ஏறத்தாழ 800 பேர் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் வெளியுறவு அமைச்சிடம் மின்பதிவு செய்திருந்தனர் அல்லது வெள்ளத்தின்போது உதவி கோரினர்.

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் இந்தத் தகவல்களைத் திங்கட்கிழமை (டிசம்பர் 1) பதிவிட்டுள்ளார்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த சிங்கப்பூரர்களைத் தாயகம் அழைத்துவர அல்லும் பகலும் அயராது பணியாற்றிய அமைச்சின் தூதரக உதவிக் குழுவினருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

தாய்லாந்து அரசாங்கம், அரச தாய் ஆயுதப் படை, அரசு சாரா அமைப்புகள், தொண்டூழியர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மேலும், வெளியேற்றப் பணிகளின்போது தேவையான ஆதரவு வழங்கிய மலேசிய அரசாங்கத்திற்கும் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

“தாய்லாந்து நிவாரணப் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் சமூகத்தினரும் விரைவில் நிலைத்தன்மையை மீட்டெடுப்பர் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) சிங்கப்பூரர்கள் ஏறத்தாழ 600 பேர் ஹாட் யாய் நகரிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தது.

வெள்ளச் சூழலில் 893 பேர் அமைச்சிடம் உதவி கோரியிருந்தனர். அவர்களில் 608 பேர் சிங்கப்பூருக்கு விமானம் மூலம் திரும்பியதாகவோ விமான நிலையத்தில் விமானத்துக்குக் காத்திருந்ததாகவோ அது குறிப்பிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்