ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட பெண் ஒருவருக்கு ‘ஆழ்ந்த அமைதியில் இளைப்பாறுக’, என்ற வாசகத்துடன் மூன்று மலர் வளையங்களைப் பெற்றிருந்தார்.
காவல்துறையிடம் பல முறை புகார் செய்துள்ளபோதும் இந்தத் தொல்லை ஓராண்டுக்கு மேல் நீடித்ததாக 60 வயது திருவாட்டி ஸுவோ, ஷின் மின் நாளிதழிடம் தெரிவித்தார்.
2024ல் திருவாட்டி ஸுவோவின் தோழி 58 வயது திருவாட்டி லான், சுகாதாரப் பொருள்களை வாங்க உதவி செய்திருந்தார்.
அவரை உறுப்பினராகப் பதிவு செய்வதாகக் கூறி, திருவாட்டி ஸுவோவிடம் அடையாள அட்டையைப் பெற்ற திருவாட்டி லான், அதன் புகைப்படத்தைப் பயன்படுத்திக் கடன் முதலைகளிடம் பணம் பெற்றதாகப் பின்னர் தெரியவந்தது.
“ஜூரோங் வெஸ்ட்டில் இசைப்பள்ளி திறந்த என் கணவரின் மாணவராகத் திருவாட்டி லான் சேர்ந்தார். அப்போதுதான் நாங்கள் சந்தித்தோம்,” என்று திருவாட்டி ஸுவோ கூறினார்.
கடன் முதலைகளிடமிருந்து அச்சுறுத்தும் குறுஞ்செய்திகளை திருவாட்டி ஸுவோ தொடர்ந்து பெறுகிறார்.
“இந்தச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. திருவாட்டி லானின் சகோதரியின் தொடர்பு விவரங்களை நான் வழங்கியபோதும் கடன் முதலைகள் எனக்குத் தொடர்ந்து தொல்லை தருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
ஜூலை 8ஆம் தேதி திருவாட்டி ஸுவோவின் மகன், கணவரின் இசைப்பள்ளிக்கு நண்பகல் அளவில் சென்றபோது பள்ளியின் நுழைவாயிலில் ‘ஆழ்ந்த அமைதியில் இளைப்பாறுக’ என்ற வாசகத்தைத் தாங்கிய மலர் வளையம் இருந்ததைக் கண்டார்.
தொடர்புடைய செய்திகள்
மலர் வளையம், திருவாட்டி ஸுவோவிற்கு அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.
கண்காணிப்புக் கேமராக்களைச் சோதித்தபோது, முன்னாள் இரவு 10 மணி அளவில் அந்த வளையம் அங்கு வைக்கப்பட்டது தெரிய வந்தது.
மலர் வளையத்தில் திருவாட்டி லானின் படம் ஒட்டப்பட்டிருந்தது.
இதன் தொடர்பில் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டபோதும் கடன் முதலை மறுநாளும் தம்மை மீண்டும் தொடர்பு கொண்டதைக் கண்டு திருவாட்டி ஸுவோ அதிர்ச்சி அடைந்தார்.
இசைப்பள்ளிக்கு மேல் இருந்த அழகு நிலையத்திற்கும் பள்ளிக்குக் கீழ்த்தளத்தில் உள்ள மற்றோர் இடத்திற்கும் இத்தகைய மலர் வளையங்கள் அனுப்பப்பட்டன.
தமது பாதுகாப்பு குறித்து கவலைப்படவில்லை என்றாலும் இவ்வளவு காலம் தொல்லைக்கு ஆளான பிறகு நிர்கதியாய் இருப்பதை உணர்வதாக திருவாட்டி ஸுவோ, ஷின் மின் நாளிதழிடம் தெரிவித்தார்.
“நான் கடன் வாங்கவும் இல்லை. என்னால் அந்தக் கடனைத் திருப்பித் தரவும் முடியாது,” என்று அவர் கூறினார்.
இதன் தொடர்பில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

