சிங்கப்பூர் உணவு தயாரிப்பைப் பாதிக்கும் மத்திய கிழக்கு மோதல்

மின்சாரம், எரிவாயு, நெகிழி, தளவாடச் செலவுகள் அதிகரிப்பால் தடுமாறும் உணவு தயாரிப்புத் துறை

சிங்கப்பூர் உணவு தயாரிப்பைப் பாதிக்கும் மத்திய கிழக்கு மோதல்

2 mins read
2b2e6f35-3040-4652-8ed4-6dc52bade2bb
டீசல் விலை அதிகரிப்பு, உணவுப் பொருள் விநியோகச் செலவை அதிகரித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, சிங்கப்பூரின் உணவு தயாரிப்புத் துறை வரலாறு காணாத சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

எரிசக்தி, தளவாடங்கள், மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏற்கெனவே அழுத்தத்தில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு, இயற்கை எரிவாயு, மின்சாரக் கட்டண உயர்வு வரும் மாதங்களில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் 20 விழுக்காடு எண்ணெய்யும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவும் விநியோகிக்கப்படும் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை முடங்கியதே இந்த அனைத்துலக விலையேற்றத்திற்கு மிக முக்கியமான காரணம்.

இந்த விநியோகத் தடை காரணமாக நெகிழிப் பொட்டலப் பொருள்கள் (plastics packages) தயாரிக்கப் பயன்படும் நாப்தா எனப்படும் பொருளின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொட்டலச் செலவுகள் கிட்டத்தட்ட 10 முதல் 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

டீசல் விலை உயர்வால், தயாரிப்பு, விநியோகச் செலவு அதிகரிப்பு

குறிப்பாகத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் டீசல் விலை 90 முதல் 100 விழுக்காடுவரை உயர்ந்துள்ளது தயாரிப்பு,போக்குவரத்துச் செலவுகளைப் பெருமளவு பாதித்துள்ளது. மேலும், கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் சரக்குகள் வந்து சேருவதில் பெரும் தாமதமும் நீடிக்கிறது.

சிங்கப்பூரின் பொருளியலில் முக்கியப் பங்கு வகிக்கும் உணவு உற்பத்தித் துறை, இந்த இக்கட்டான சூழலில் செலவுகளைக் கட்டுப்படுத்தப் போராடி வருகிறது.

தற்போதைய சூழல் நீடித்தால், உணவுப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சிங்கப்பூர் உணவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ரேமண்ட் டான் எச்சரித்துள்ளார்.

இந்த விலை உயர்வு, நுகர்வோரை நேரடியாகப் பாதிப்பதோடு, நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கத்தையும் அதிகரிக்கக்கூடும் என்று பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

நிலைமையைக் கண்காணிக்கவும் உற்பத்தியாளர்களுக்கு உதவவும் சம்பந்தப்பட்ட அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்