தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சைக்கிளோட்டப் பாதைகளுக்கு அருகே உள்ள நடைபாதைகளில் சைக்கிள் ஓட்ட அனுமதி இல்லை

2 mins read
acfab290-f706-4ff0-9631-1f291b176ba7
2025ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அமலுக்கு வரும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சைக்கிளோட்டப் பாதைகளுக்கு அருகே அமைந்துள்ள நடைபாதைகளில் பாதசாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறையால் சைக்கிள்கள், மின்ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கு (PMDs) சம்பந்தப்பட்ட நடைபாதைகளில் ஓட்ட அனுமதி இல்லை. சம்பந்தப்பட்ட நடைபாதைகளின் மொத்த நீளம் 200 கிலோமீட்டருக்கும் அதிகமாகும்.

புதிய நடைமுறைக்கு மாற சைக்கிள், மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்களுக்குத் தகுந்த கால அவகாசம் தர வேண்டும் என்பதால் 2025ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அமலுக்கு வரும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.

விதிமுறையை மீறுபவர்களுக்கு 2,000 வெள்ளி வரை அபராதமோ மூன்று மாதம் வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தற்போது சைக்கிளோட்டப் பாதைகளில் உள்ள நடைபாதைகளில் சைக்கிள்கள், மின்ஸ்கூட்டர்கள் உள்ளிட்டவை ஓட்ட அனுமதி உண்டு என்று ஆணையம் தெளிவுபடுத்தியது.

புதிய நடைமுறை நடப்புக்கு வந்த பிறகு சம்பந்தப்பட்ட நடைபாதைகளில் பாதசாரிகள், மின்சக்கர நாற்காலிகள், சிறப்புத் தேவையுடையோர் பயன்படுத்தும் ஸ்கூட்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். சிறப்புத் தேவையுடையோர் பயன்படுத்தும் ஸ்கூட்டர்களின் வேகம் மணிக்கு 6 கிலோ மீட்டருக்குக்கீழ் இருக்க வேண்டும்.

புதிய விதிமுறை மூலம் பொது நடைபாதைகளை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு மேம்படும், குறிப்பாக பாதசாரிகளுக்கு அது நன்மையாக அமையும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.

இதுகுறித்து பி‌‌‌ஷான் ஸ்திரீட் 13ல் உள்ள புளோக் 196ல் அமைச்சர் சீ செய்தியாளர்களிடம் பேசினார்.

2019ஆம் ஆண்டு முதல் சைக்கிள், மின்ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட சாதனங்களால் ஏற்படும் விபத்துகள் குறைந்து வருகின்றன; நடைபாதைகளில் ஆபத்து உள்ளது என்பதால் புதிய விதிமுறையை அறிமுகம் செய்யவில்லை, நடைபாதைகள் அருகே சைக்கிள்கள் செல்ல அதிகத் தடங்கள் உள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டது என்று அமைச்சர் சீ தெரிவித்தார்.

நடைபாதைகளில் சைக்கிள் ஓட்டிகள் வராமல் இருக்க பாதைகளில் “பாதசாரிகள் மட்டுமே” என்ற ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் பாதசாரிகள் சைக்கிள் செல்லும் தடங்களில் நடக்க வேண்டாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்