கடந்த 2019ஆம் ஆண்டு உயிரிழப்பை ஏற்படுத்திய வேலையிட விபத்திற்காக ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு $210,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பார்க்கர் ரோடு, ஆங்கிலோ சீனப் பள்ளி வளாகத்தில் கடந்த 2019 நவம்பர் 22ஆம் தேதி நேர்ந்த விபத்தில் ஹொசைன் ரிப்பன் என்ற 38 வயது பங்ளாதேஷ் ஆடவர் காயமடைந்தார்.
தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இரு நாள்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ், வேலையிடம் அனைவர்க்கும் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிசெய்யத் தவறியதாகக் கூறி, ‘எச்.பி. கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் எஞ்சினியரிங்’ நிறுவனத்திற்குச் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) நீதிமன்றம் அபராதம் விதித்தது.
விபத்து நேர்ந்தபோது அப்பணியிடத்தில் திட்ட மேலாளராகப் பணிபுரிந்த வோங் ஃபாங் யி என்பவருக்குக் கடந்த 2024 அக்டோபரில் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ நாளன்று காலை 10.40 மணியளவில் மணிக்கூண்டுச் சுவர் முகப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், சில செங்கற்கள் திரு ஹொசைனின் தலையைப் பதம்பார்த்தன.
அப்போது, அவ்விடத்தில் அவர் மட்டுமே இருந்ததாகக் கூறப்பட்டது.
சத்தம் கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த சக ஊழியர்கள், திரு ஹொசைன் இடிபாடுகளுக்கு அடியில் கிடந்ததைக் கண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
உடனடியாக அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆயினும், சிகிச்சை பலனின்றி இரு நாள்களுக்குப் பிறகு அவர் உயிர் பிரிந்தது.