தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்டுமானத் தள விபத்தில் வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு

1 mins read
c136f610-dfbe-4c0e-a71c-03d16792192c
விபத்து நேர்ந்ததாக அறியப்படும் ‘மெக்நேர் ஹைட்ஸ்’ குடியிருப்புக் கட்டுமானத் தளம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மெக்நேர் சாலையில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) நேர்ந்த விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மாண்டுபோனார்.

முன்வார்ப்பு கான்கிரீட் வடிகால் குழாய் ஒன்றை அகழ்பொறியால் தூக்கியபோது, அது தாக்கி அந்த 38 வயது பங்ளாதேஷ் ஊழியர் இறந்துபோனதாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்து நேர்ந்த இடத்திலேயே அவர் மாண்டுபோனதைத் துணை மருத்துவப் படையினர் உறுதிப்படுத்தினர்.

காலை 9.20 மணியளவில் இவ்விபத்து நேர்ந்ததாக மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) ‘மெக்நேர் ஹைட்ஸ்’ அடுக்குமாடி குடியிருப்புத் திட்டப் பணிகள் அக்கட்டுமானத் தளத்தில் இடம்பெற்று வருவதாக அறியப்படுகிறது.

அத்திட்டத்தின் கட்டுமான ஒப்பந்ததாரரான கே லிம் கன்ஸ்ட்ரக்‌ஷன் அண்ட் டிரேடிங் நிறுவனத்தில் அந்த பங்ளாதேஷ் ஊழியர் பணியாற்றி வந்தார்.

அந்த ஆடவரின் மறைவிற்காக அவருடைய குடும்பத்தாரிடம் வீவக இரங்கல் தெரிவித்தது.

விபத்தைத் தொடர்ந்து அந்தக் கட்டுமானத் தளத்தில் முன்வார்ப்பு கான்கிரீட் குழாய்களைத் தூக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

விபத்து குறித்து அமைச்சு விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்