முன்னாள் கண்டாங் கெர்பாவ் (கேகே) மருத்துவமனை அதன் 101வது ஆண்டுநிறைவில் சிங்கப்பூரின் 76வது தேசிய நினைவுச் சின்னமாக அக்டோபர் 1ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், முன்னாள் கேகே மருத்துவமனையின் மூன்று கட்டடங்கள் நினைவுச்சின்ன பாதுகாப்புச் சட்டப்படி பாதுகாக்கப்படும்.
இன்று 1 ஹேம்ப்ஷியர் சாலையிலுள்ள நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமையகம், ஒரு காலத்தில் கண்டாங் கர்பாவ் மருத்துவமனை எனப்படும் கேகே மருத்துவமனையாக இருந்தது. அக்காலத்தில் சிங்கப்பூரில் மகப்பேற்று நிபுணத்துவம் பெற்ற ஒரே அரசாங்க மருத்துவமனையாக அது திகழ்ந்தது.
1924 முதல் 1997 வரை 1.2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கேகே மருத்துவமனையில் பிறந்தன.
கேகே மருத்துவமனை தொடங்கப்படுமுன் அவ்வளாகத்தில் 1858 முதல் சிங்கப்பூரின் ஐந்தாவது பொது மருத்துவமனை செயல்பட்டது. அங்கு மகப்பேற்று சிகிச்சையைப் பெற முடிந்தது. 1880கள் முதல் 1920 வரை வசதி குறைந்த பெண்களும் அங்கு சிகிச்சை பெற்றனர். 1924ல் அது கேகே மருத்துவமனை எனும் இலவச மருத்துவமனையாக மாறியது.
இரண்டாம் உலகப் போரின்போது கேகே மருத்துவமனை அவசரப் பொது மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போதும் அது தொடர்ந்து இயங்கியது.
சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் டாக்டர் பெஞ்சமின் ஹென்றி ஷியர்ஸ் கேகே மருத்துவமனையின் முதல் உள்ளூர் மகப்பேற்று மருத்துவராக 1937ல் இணைந்தார் என்பது சிறப்புக்குரிய செய்தி.
1966ல் உலகிலேயே ஆக அதிக குழந்தைப் பிறப்புக்காக கின்னஸ் உலகச் சாதனை படைத்தது கே கே மருத்துவமனை.
தொடர்புடைய செய்திகள்
1971ல் சிங்கப்பூரின் முதல் பாலியல் மாற்று (sex-change) அறுவை சிகிச்சையைப் பேராசிரியர் எஸ் எஸ் ரத்தினம் கே கே மருத்துவமனையில்தான் செய்தார். அவர் தலைமையிலான அணியின் முயற்சியில், 1983ல் ஆசியாவில் செயற்கைக் கருத்தரிப்பு (ஐவிஎஃப்) மூலம் முதல் குழந்தையும் அம்மருத்துவமனையில்தான் பிறந்தது.
1997 மார்ச்சில் கேகே மருத்துவமனை 100 புக்கிட் தீமா சாலைக்கு (இன்றைய வளாகத்துக்கு) இடம்பெயர்ந்தது; கேகே மகளிர், சிறார் மருத்துவமனை என பெயர் மாற்றம் பெற்றது.
முன்னாள் கேகே மருத்துவமனையின் வரலாற்றுச் சிறப்புகளை விவரிக்கும் கண்காட்சி நிலப் போக்குவரத்து ஆணையக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணிவரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். அக்கண்காட்சிக்கு https://nhbtourskkh.peatix.com/ இணையத்தளம் வழியாகப் பதிவுசெய்யலாம்.
மேல்விவரங்களுக்கு go.gov.sg/monument-kkh இணையத்தளத்தை நாடலாம்.