ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட 4 மலேசியர்கள்

2 mins read
ea59ca1d-3a78-46e2-8f7f-27e86dcf3dd2
கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் 26 வயதுப் பெண். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள்போல ஆள்மாறாட்டம் செய்ததாக நான்கு மலேசியர்கள் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது.

அந்த மோசடியில் பொதுமக்கள் மில்லியன் வெள்ளிக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர்.

நான்கு மலேசியர்களும் வெவ்வேறு மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

முதல் சம்பவத்தில் பெருந்தொகைகளை மாற்றுவோர் குறிவைக்கப்பட்டனர். அரசாங்க அதிகாரிகள்போல ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்பட்ட மோசடியில், அத்தகையோரில் ஒருவர் $1.1 மில்லியனுக்கு மேல் பறிகொடுத்ததாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) கூறியது.

தாம் ஏமாற்றப்பட்டது குறித்து அந்த நபர் கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி காவல்துறையிடம் புகார் செய்தார்.

மோசடியில் பறிக்கப்பட்ட பணம் அடுத்த சில மணி நேரங்களில் மலேசியாவில் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு பணமாற்றத் தளங்கள் வாயிலாக மோசடிக்காரர்களின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்ததாக, விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின், மோசடிக்கு எதிரான அலுவலகத்தின் அதிகாரிகள் மலேசியக் காவல்துறையின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவுத் துறையுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அதன் பயனாக 24 வயது மற்றும் 30 வயதுடைய இரு ஆடவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) கைது செய்யப்பட்டனர்.

மற்றொரு மோசடிச் சம்பவம் தொடர்பாக ஜனவரி 19ஆம் தேதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

எச்எச்பிசி வங்கி அதிகாரி என்று தம்மை கூறிக்கொண்ட ஒருவரிடம் $50,000 இழந்தவர் அந்தப் புகாரை அளித்தார். அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 28 வயது ஆடவர் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

மூன்றாவது சம்பவத்தில் முதியவரிடம் மோசடி செய்து $15,000 பறித்த 26 வயதுப் பெண் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்