தீவு விரைவுச்சாலையில் திங்கட்கிழமை (மார்ச் 10) நான்கு வாகனங்களுக்கு இடையே விபத்து நிகழ்ந்தது.
அதில் இருவர் லாரியில் சிக்கிக்கொண்டனர். அவ்விருவரையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பின்னர் மீட்டது.
இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஒரு கார், மூன்று லாரிகளுக்கு இடையே ஏற்பட்ட விபத்து குறித்து திங்கட்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன. தோ குவான் மேம்பாலத்துக்கு அருகே சாங்கியை நோக்கிய தீவு விரைவுச்சாலைப் பகுதியில் விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
லாரி ஒன்றின் முன்னிருக்கைகளில் இருவர் சிக்கிக்கொண்டதை அதிகாரிகள் கண்டனர். தகுந்த கருவிகளைக் கொண்டு அதிகாரிகள் அவர்களை மீட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
லாரியில் மேலும் ஓர் ஆடவரும் இருந்திருக்கிறார். ஆனால், அவர் சிக்கிக்கொள்ளவில்லை.
லாரி ஓட்டுநரும், 24, அவருடன் இருந்த பயணிகள் இருவரும் அம்மூவர் ஆவர்.
பயணிகள் இருவருக்கும் வயது 32, 59. இருவரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது நினைவுடன் இருந்ததாக குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
விபத்துக்குப் பிந்திய நிலவரத்தைக் காட்டும் காணொளி, Singapore Roads Accident ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.