தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சகோதரத்துவத்துடன் 25 ஆண்டுகளாகத் தொடரும் கிறிஸ்துமஸ் விழா

2 mins read
c6d268f3-5676-43c9-ab61-17a210e1cc09
கிறிஸ்து சேகர சபையின் ‘இந்திய நண்பர்கள் தமிழ் ஊழியம்’ நடத்திய வெளிநாட்டு ஊழியர்களுக்கான கிறிஸ்துமஸ் விழாவின் ஒரு காட்சி. - படம்: இந்திய நண்பர்கள் தமிழ் ஊழியம்
multi-img1 of 2

தாயகம் கடந்தாலும் தனிமையில் இருக்க வேண்டியதில்லை.

‘இந்திய நண்பர்கள் தமிழ் ஊழியம்’ வாயிலாக வெளிநாட்டு ஊழியர்களுடன் நட்புப் பாராட்டி ஏறத்தாழ கால் நூற்றாண்டாக அவர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர் கிறிஸ்து சேகர சபையினர்.

டோர்செட் ரோட்டில் அமைந்திருக்கும் கிறிஸ்து சேகர சபையின் ஏற்பாட்டில் துவாஸ், பெஞ்சுரு, உட்லண்ட்ஸ் என பல்வேறு இடங்களில் டிசம்பர் முதல் வாரம் துவங்கி பல்வேறு தினங்களில் கிறிஸ்துமஸ் விழாக்கள் வழக்கம்போல இந்த ஆண்டும் சிறப்பாக நடந்தேறின.  

“உற்றார் உறவினர் என்றல்லாது இறைவன் நமக்குக் காட்டிய அன்பை நம் சமூகத்தில் இணைந்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வெளிப்படுத்துவது முக்கியம்,” என்று கூறினார் கிறிஸ்து சேகர சபையின் போதகர் தியோடர் சாம்ராஜ். 

விழா குறித்துக் குறிப்பிட்ட அவர், “கிறிஸ்துமஸ் பண்டிகையைக்  கொண்டாடக் கூடிவரும் வேளையில், நாம் வாழும் உலகில் நிலவும் சூழல் குறித்த விழிப்புணர்வு முக்கியம். பல்வேறு வலி, வேதனைகளால் வருந்தும் மக்களுக்கு நம்பிக்கை, மகிழ்ச்சி அளிப்பதற்கு இத்தகைய நிகழ்ச்சிகள் உதவுகின்றன,” என்றார். 

இதற்கிடையே வேலை, தங்குவிடுதி என்று பரபரப்பாக சுழன்றுவரும் வெளிநாட்டு ஊழியர்கள், தங்களைச் சந்திக்க வரும் சிங்கப்பூர் சகோதரர்கள் குறித்த தங்கள் எண்ணங்களைத் தமிழ் முரசிடம் பகிர்ந்தனர்.

“இத்தகைய விழாக்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, இதில் இடம்பெறும் விளையாட்டுப் போட்டிகள் எங்கள் கவலைகளை மறக்கச் செய்து புத்துணர்வை அளிக்கின்றன,” என்று கூறினார் கப்பல்துறையில் பணியாற்றி வரும் திரு ராமகிருஷ்ணன் ரவீந்திரன்.

சிங்கப்பூரில் ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் திரு பாபிநாத் பரசுராமனுக்கு துவாஸ் பொழுதுபோக்கு நிலையத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழா அவரது பள்ளிப் பருவத்தை நினைவூட்டியது. 

“கிறிஸ்துவப் பள்ளியில் பயின்றபோது பார்த்த கிறிஸ்துமஸ் நாடகங்களை தற்போது சிங்கப்பூரில் மீண்டும் தமிழில் பார்க்கக் கிட்டிய வாய்ப்பு இனிது,” என்றார் திரு பாபிநாத்.

இங்கு பத்து ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் திரு துரைசெல்வன் வெள்ளத்துரை, “பிரச்சினைகளை மறந்து விழாக்கால உணர்வைப் பெறுவதற்கு இத்தகைய நிகழ்ச்சிகள் வழிவகுக்கின்றன.

“தாய்நாடு வெகுதொலைவில் இருந்தாலும், பண்டிகையைச் சேர்ந்து கொண்டாடச் சகோதர, சகோதரிகள் சிங்கப்பூரிலும் உண்டு என்பதை இது உறுதிப்படுத்துகிறது,” என்றார் அவர்.

‘இந்திய நண்பர்கள் தமிழ் ஊழியம்’ ஒருங்கிணைப்பாளர் ஜான் காட்வின் மோசஸ், “இங்கு பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் தனிமையைப்  போக்கவும் அவர்கள் நம்முடன் கலந்துரையாடவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவும்,” என்று கருத்துரைத்தார்.

“இதுபோன்ற விழாக்களை ஏற்பாடு செய்யும்போது வெளிநாட்டு நண்பர்களுக்குப் பயனுள்ள வகையில் என்ன பரிசு கொடுக்கலாம்? ருசியான  உணவுகளை எங்கிருந்து வாங்கலாம்? என்று பல்வேறு நீண்ட ஆலோசனைகளை இக்குழுவில் உள்ள சகோதரர்கள் நடத்துவோம்.

“பண்டிகை நாள்கள் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக அவர்களைச் சந்தித்து அவர்களுக்காக நேரம் செலவிடுவதை முக்கிய இலக்காகக் கொண்டு இத்தனை ஆண்டுகளாகப் பயணித்து வருவது மனநிறைவைத் தருகிறது,”  என்றார் திரு ஜான்.

அன்பளிப்புகள், விளையாட்டுப் போட்டிகள், கிறிஸ்துமஸ் நோக்கத்தைப் பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள், பரிசு, அறுசுவை விருந்து என்று நீடித்த ஒன்றுகூடல் விழாவில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்