ஹார்வி நோர்மன் கடைப் பெயரில் ஜனவரியிலிருந்து மோசடி: $4.8 மி.இழப்பு

ஹார்வி நோர்மன் கடைப் பெயரில் ஜனவரியிலிருந்து மோசடி: $4.8 மி.இழப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Sep 2026 - 10:07 am

1 mins read

இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி, ஹார்வி நோர்மன் கடையின் ஊழியர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட மோசடி நபர்களிடம் $4.8 மில்லியன் மதிப்புள்ள தொகையை பொதுமக்கள் இழந்துள்ளனர்.

இதுபோன்ற மோசடிகள் உட்பட அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளிலும் ஏமாற்றப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக காவல்துறை திங்கட்கிழமை (செப்டம்பர் 21) வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை 119 சம்பவங்கள் ஹார்வி நோர்மன் ஊழியர்கள் பெயரில் நடந்தது குறித்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த மோசடி வகையின் விவரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செப்டம்பர் 14ஆம் தேதி செய்தியாக வெளியிட்டது. அதில் மே மாதத்திலிருந்து 1,588 மோசடி சார்ந்த விளக்கங்கள் கேட்ட பொதுமக்களின் அழைப்புகளை ஹார்வி நோர்மன் நிறுவனம் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தது.

அந்த எண்ணிக்கையில் நேரடியாக வந்து தகவல்கள் கேட்டோர் உள்ளடங்கவில்லை. அவர்களில் மத்திய வயதுடையோரும் முதியோருமே அதிகமாக இருந்தனர் என்று நிறுவனம் விளக்கியது. தமது ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளின் புகார்கள் நிறுவனத்துக்கு 2025ஆம் ஆண்டில் முதன்முதலில் தெரியவந்ததாகவும் அது கூறியது.

அதன்படி, பாதிப்படைந்தோரிடம் மோசடிக்காரர்கள் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் எனக்கூறிக்கொண்டு தொலைபேசியில் அழைப்பர். பிறகு அவர்கள் தொலைக்காட்சிகளை வாங்கியதாகவோ, அல்லது ஒரு பொருளை அவர்களிடம் அனுப்பவேண்டியிருப்பதாகவோ பொய்யுரைப்பர் என்று காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்