பொங்கோல் விளையாட்டு நிலையத்தில் அக்டோபர் 31 வரை இலவச உடலுறுதிப் பயிற்சி

பொங்கோல் விளையாட்டு நிலையத்தில் அக்டோபர் 31 வரை இலவச உடலுறுதிப் பயிற்சி

படம்: ஏஷியாஒன்

29 Oct 2026 - 6:34 pm

1 mins read

பொங்கோலில் வசிப்போர், பயில்வோர், வேலை செய்வோருக்குப் புதிய பொழுதுபோக்கு மையமாக ஆக்டிவ்எஸ்ஜி பொங்கோல் விளையாட்டு நிலையம் அமையவுள்ளது.

இந்த விளையாட்டு நிலையம் முதற்கட்டமாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகப் புதன்கிழமை (அக்டோபர் 28) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் ஆக்டிவ்எஸ்ஜி அறிவித்தது. அக்டோபர் 31ஆம் தேதி வரை அங்குள்ள உடலுறுதிக் கூடத்திற்கு இலவசமாகச் செல்லலாம்.

அரசாங்கத்தின் விளையாட்டு நிலையங்கள் பெருந்திட்டத்தின்கீழ், வட்டாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலையம் என்று இந்த நிலையம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் காற்பந்துக்கான விளையாட்டரங்கம், நீச்சல் குளம், உடலுறுதிக் கூடம், புட்சால், டென்னிஸ் திடல்கள், நீர் விளையாட்டு மையம், தேசிய வில்வித்தைப்பயிற்சி மையம் ஆகியவை அமைந்துள்ளன.

“இந்த நிலையம், பொங்கோல்வாசிகள் அனைவரும் நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒன்று,” என மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் சமூக ஊடகத்தில் பதிவிட்ட காணொளியில் குறிப்பிட்டார். 2020ல் தொடங்கிய இதன் கட்டுமானப் பணி, கொவிட்-19 பரவலால் தாமதமாகி, இந்த ஆண்டு திறக்கப்படுகிறது.

இந்நிலையம் நவம்பர் 22ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்