பிடோக்கில் உள்ள கடை ஒன்றின் முதிய உரிமையாளர் ஒருவர், அன்றைய தினம் முன்கூட்டியே வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுக்க உதவும் வகையில், ஓர் ஆடவரும் அவரது நண்பர்களும் அக்கடையிலிருந்த அனைத்துப் பொருள்களையும் $1,000 செலவு செய்து வாங்கினர்.
ஆனால் அந்த முதியவரோ, அப்பொருள்களைக் குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கும் பணியில் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.
ஜெய் டான் என்ற அந்த ஆடவர், அந்த நெகிழ்ச்சியான தருணத்தை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டார்.
அந்த முதியவரின் கடையில் உள்ள அனைத்துப் பொருள்களையும் வாங்கி, அவற்றைத் தேவைப்படுவோருக்கு வழங்கத் தாமும் தமது நண்பர்களும் விரும்பியதாக அவர் விளக்கினார்.
அந்தக் காணொளியில், கடையின் உரிமையாளரை அணுகிப் பணத்தைக் கொடுப்பதற்கு முன்பாக, தாங்கள் வாங்கும் பொருள்கள் அறப்பணிக்காகப் பயன்படுத்தப்பட உள்ளதாக டான் விவரிப்பதைக் கேட்கமுடிகிறது.
அன்றைய தினம் அந்த முதியவர் முன்கூட்டியே ஓய்வெடுக்கலாம் என்றும் டான் அவரிடம் கூறுகிறார்.
இருப்பினும், அந்தப் பொருள்களை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கும் பணியில் அவர்களுடன் இணைந்துகொள்ள விரும்புவதாக அந்தக் கடை உரிமையாளர் தெரிவித்ததை டான் பின்னர் பகிர்ந்துகொண்டார். ‘ஸ்டோம்ப்’ மின்னிலக்கச் செய்தித் தளத்திடம் பேசிய 24 வயது டான், கடை உரிமையாளர் 65 வயது ‘ஆண்டி ஆலிசன்’ என்று அடையாளம் காட்டினார்.
அந்த முதியவர் 16, பிடோக் சவுத் ரோட்டில் ‘மியாவ் யின் ஆர்கானிக் அன்ட் வெஜிடேரியன் மார்ட்’ எனும் கடையை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
தாங்கள் அந்த யோசனையை முன்வைத்தபோது, திருவாட்டி ஆலிசன் தொடக்கத்தில் வார்த்தையின்றி திகைத்து நின்றதாகவும் பின்னர் மிகுந்த உற்சாகம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
