சிங்கப்பூரின் ரஹ்மதான் லில் அலமின் அறநிறுவனம் காஸாவில் மீட்சி, மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான நிதித் திரட்டு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலகக் குழந்தைகள் அவசரநிலை நிதி அமைப்பு, எகிப்து செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து அது இந்த நிதித் திரட்டு நடவடிக்கையை மேற்கொள்கிறது.
இதற்கு, ஜனவரி 8ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை நன்கொடை அளிக்கலாம்.
போரால் சீர்குலைந்துள்ள காஸா வட்டாரத்தில் அடிப்படைச் சேவைகளையும் அத்தியாவசிய உள்கட்டமைப்பையும் மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டது.
திரட்டப்படும் நிதி, மனிதநேய அமைப்புகளான யுனிசெஃப், எகிப்து செஞ்சிலுவைச் சங்கம் இரண்டிற்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நன்கொடை வழங்க விரும்புவோர் பேநவ், வங்கிப் பணப்பரிமாற்றம், காசோலை, கிவிங்.எஸ்ஜி போன்ற தளங்கள் வாயிலாகவோ பங்கேற்கும் பள்ளிவாசல்களுக்கு நேரில் சென்றோ நிதி அளிக்கலாம்.
இந்த நிதித் திரட்டு இயக்கத்தை வரவேற்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஃபைஷால் இப்ராகிம் கூறினார்.

