முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தொழிற்பூங்கா அமைக்கும் முதல் அரசாங்கத் திட்டத்துக்கு மூல காரணமாக இருந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் கறுப்பு, வெள்ளை புகைப்படம் இன்றும் சூச்சோ தொழிற்பேட்டை காட்சியகத்தை அலங்கரிக்கிறது.
இது பற்றி சிங்கப்பூர் ஊடங்களிடம் பேசிய துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், “அவர்கள் பழைய நண்பர்களை மறக்க மாட்டார்கள்,” என்றார்.
இதற்கு அந்தப் புகைப்படத்தை அவர் உதாரணமாக சுட்டிக் காட்டினார்.
சீனாவுடன் சிங்கப்பூரின் முந்தைய தலைவர்கள் பணியாற்றியதைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தற்போதைய தலைமுறைத் தலைவர்களில் திரு கானும் ஒருவர்.
அடுத்த வாரம் சீனாவின் துணைப் பிரதமர் டிங் சியூசியாங் சிங்கப்பூருக்கு வருகிறார். அந்த சமயத்தில் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றத்திற்கு (Joint Council for Bilateral Cooperation: ஜேசிபிசி) முதல் முறையாக திரு கான் இணைத் தலைவராக செயல்படவிருக்கிறார். இது, இரு நாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட வருடாந்தரக் கூட்டமாகும்.
2024ஆம் ஆண்டு ஜேசிபிசி கூட்டம் 20வது முறையாக நடைபெறுகிறது. லாரன்ஸ் வோங் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டமாகும்.
இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் வளர்க்க இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இந்தக் கூட்டம் அரிய வாய்ப்பாக அமைகிறது.
இத்தகைய ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகளுக்கும் திறவுகோலாக உள்ளது. இரு நாட்டின் அதிக மக்கள் கல்வி, சுற்றுலா பயணத்திற்கும் இது வழி வகுக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“புதிய ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் இரு தரப்புக்கும் பலனளிக்கும் வழிகளில் நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் வளர்ப்பது அவசியம்,” என்று திரு கான் அக்டோபர் 30ஆம் தேதி சிங்கப்பூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இத்தகைய அரசாங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சாதாரண மக்களுக்கு ஏற்றதல்ல. இருந்தாலும் கடந்த 30 முதல் நாற்பது ஆண்டுகளாக சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை வடிவமைத்துள்ளனர் என்பதை திரு கான் சுட்டிக்காட்டினார்.