காஸா போர்நிறுத்தம் உடனடியாக இடம்பெறவேண்டும் என்று சிங்கப்பூர் குரல் கொடுத்துள்ளது.
காஸாவுக்கு மனிதாபிமான உதவி வழங்குவதன் தொடர்பிலான கட்டுப்பாடுகளை உடனடியாக அகற்றுமாறு இஸ்ரேலுக்கும் எல்லா பிணைக்கைதிகளையும் விடுவிக்குமாறு ஹமாஸ் அமைப்புக்கும் சிங்கப்பூர் குரல் கொடுத்துள்ளது. மனிதாபிமான உதவி வழங்கப்படுவதற்கு இடையூறுகள் ஏற்பட்டிருப்பதால் அதிக அளவில் மக்கள் உணவின்றி பட்டினியால் அவதிப்படுவதாகவும் போதுமான அத்தியாவசிய மருத்துவச் சேவைகள் இல்லாமல் இருப்பதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (ஜூலை 24) குறிப்பிட்டது.
உணவைப் பெறப் போகும்போது மக்கள் சுடப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்த வேளையில் வெளியுறவு அமைச்சு இவ்வாறு குரல் கொடுக்கிறது.
அவசரமாக வழங்கப்படவேண்டிய மனிதாபிமான உதவி மக்களைச் சென்றடைவதில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை இஸ்ரேலிய அரசாங்கம் உடனடியாக அகற்றவேண்டும் என்று வெளியுறவு அமைச்சு எடுத்துரைத்துள்ளது.
அரேபிய தீபகற்பத்தில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிவாரண மற்றும் பணிகள் அமைப்பு (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East) போன்ற அமைப்புகள் தங்களின் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர வகைசெய்யவேண்டும் என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, எல்லா பிணைக்கைதிகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்குமாறு வெளியுறவு அமைச்சு, ஹமாசுக்கும் குரல் கொடுக்கிறது.