‘ஸி’ தலைமுறையின் போராட்டம், அதிரடி அரசியல் மாற்றத்திற்கான வழியாக மட்டுமல்லாமல், நிலையான மாற்றத்தை அளித்து அரசியல் களத்தைத் தூய்மைப்படுத்தும் திறவுகோலாக இருக்கவேண்டும் என்று கூறினர் அரசியல் கொள்கை ஆய்வு நிபுணர்கள்.
தெற்காசிய ஆய்வுக் கழக அனைத்துலக மாநாட்டின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை (மார்ச் 24), தெற்காசியாவில் ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள், அரசியல் கட்டமைப்பின் மாற்றத்தை நோக்கிய அரசியல் எனும் தலைப்பில் அமர்வுகள் நடந்தேறின.
ஊழலுக்கு எதிரான இயக்கங்களும் அவற்றின் இலக்குகளும் பொதுமக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; என்றபோதும் அவை பெரும்பாலும் அர்த்தமுள்ள கட்டமைப்பு மாற்றத்தைக் கொண்டுவருவதில் ஏன் தோல்வியடைகின்றன என்பதற்கான விவாதங்கள் அமர்வில் முக்கிய இடம்வகித்தன.
“சாதாரண சூழல்களில் எதைச் செய்ய முடியாதோ, அதை நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி மக்கள் செய்து முடிக்கிறார்கள். ஊழல் ஒழிப்பைப் பகைவர்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தும் போக்கு மாறிட வேண்டும்,’’ என்ற கருத்தை இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை கெளரவப் பேராசிரியர் அர்ஜுனா பராக்ரமா முன்வைத்தார்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் கண்களுக்குமுன் நடக்கும் செயல்களுக்கு மட்டுமல்ல, அமைதியாக நடந்தேறும் அவலங்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். தவறுகள், அநீதிகளாக உருவெடுக்கையில் குறைந்த அதிகாரம் உள்ளவர்களே ஆக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்தும் அமர்வில் விவாதிக்கப்பட்டது.
தென்கிழக்காசியப் போராட்டங்களை இயக்கும் மூவரணி
மின்னிலக்க உலகில் தலைமைத்துவம், அரசியல் களப் போராட்டங்களை இயக்குபவை என்பன போன்ற தலைப்புகளிலும் அரசியல் ஆய்வாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
அப்போது அண்மைக் காலங்களில் தென்கிழக்காசியாவில் நிகழும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களுக்குப் பின்னால் கணிசமான சூழல்களில் பொருளியலைப் பெரும்பான்மையாக இயக்கிடும் முக்கோணக் கூட்டணி உள்ளதும் தெரியவருவதாகப் பேராளர்கள் கூறினர்.
தொழில்துறையினர், அரசியல்வாதிகள், ஆட்சித்துறையினர் ஆகியோரே அவர்கள் குறிப்பிட்ட முக்கோணக் கூட்டணி.
இதன் தொடர்பில் உரையாற்றிய ‘நேப்பாளி டைம்ஸ்’ வார இதழின் ஆசிரியர் குந்தா தீக்ஷித் (Kunda Dixit) உரையில், நேப்பாளத்தில் அண்மையில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் இடம்பிடித்தது. இசைக் கலைஞரும் நேப்பாளத்தின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கவிருப்பவருமான பாலேந்திர ஷா பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
நேப்பாளத்தில் மக்கள் எதற்கு எதிராக வாக்களித்தனர் என்று தெரியும். ஆனால் யாருக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது பலருக்குத் தெரியவில்லை. பாரம்பரிய அரசியல்வாதி என்பதிலிருந்து மாறுபட்டவராகத் தம்மை திரு ஷா முன்னிறுத்தினார்.
‘‘நிறைய பேசவில்லை. ஆயினும் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார். தற்போது பெரும்பான்மையான ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளார். அவர் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்,’’ என்றார் திரு தீக்ஷித்.
தெற்காசியாவில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒரு நாட்டில் சரியான அரசியல் கட்டமைப்பு மாற்றங்கள் தகுந்தமுறையில் நிகழ்வது நலம்; இல்லாவிட்டால், குறுக்குவழியில் செய்யப்படும் மாற்றங்கள் மிக விரைவாகப் பழைய நிலைக்கே நாட்டைத் திருப்பிவிடும் என்றும் அரசியல் அறிஞர்கள் கருத்துரைத்தனர்.

