பருவநிலை மாற்றத்தால் உலகெங்கும் கடல் மட்டம், முன்னர் முன்னுரைக்கப்பட்டதைவிட 90 சென்டிமீட்டர் வரை கூடுதலாக உயரக்கூடும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அவ்வாறு நிகழக்கூடும் என்கிறது அந்த ஆய்வு.
முன்னதாக, ஐக்கிய நாட்டு நிறுவனப் பருவநிலை அறிவியல் அமைப்பு, 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 0.6 மீட்டரிலிருந்து 1 மீட்டர் வரை உயரக்கூடும் என்று மதிப்பிட்டிருந்தது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அவ்வாறு நேரக்கூடும் என்று அது கூறியிருந்தது.
ஆனால் என்டியு ஆய்வில், அத்தகைய சூழல்களில் கடல் மட்டம் 0.5 மீட்டரிலிருந்து 1.9 மீட்டர் வரை உயரக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
ஆய்வாளர்கள் புதிய முன்னுரைப்பு முறையை வடிவமைத்துள்ளனர். பல்வேறு கடல் மட்ட முன்னுரைப்புத் தரவுகளை வல்லுநர்கள் கருத்துகளுடன் இணைத்துப் புதிய முறை மதிப்பிடுகிறது.
இதன் மூலம் தெளிவான, மேலும் நம்பகமான முறையில் கணிக்க முடிவதாக என்டியு, ஜனவரி 27ஆம் தேதி தெரிவித்தது.
சிங்கப்பூரின் நிலப் பரப்பில் ஏறக்குறைய 30 விழுக்காடு, சராசரிக் கடல் மட்டத்திலிருந்து ஐந்து மீட்டரைவிடக் குறைவான உயரத்திலேயே உள்ளது.
சென்ற ஆண்டு வெளியான சிங்கப்பூரின் மூன்றாவது பருவநிலை மாற்ற ஆய்வறிக்கையில், புதை படிம எரிபொருள் பயன்பாடு அதிகரித்தால் சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல் மட்டம் 2150ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் வரை உயரக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.