ஷெங் சியோங்கில் நீண்டநாள் பணியாற்றியோருக்குத் தங்கக் காசுகள் பரிசு

2 mins read
da4a2d8f-af1e-422e-9e62-922d86abc6e1
தீவு முழுவதும் ஷெங் சியோங் பேரங்காடி நிறுவனம் 80க்கும் மேற்பட்ட கிளைகளை நடத்துகிறது. - படம்: எஸ்பிஹெச் ஊடகம்

ஷெங் சியோங் நிறுவனம், அதன் நீண்டநாள் பணியாளர்களை கௌரவிக்கும் நோக்கத்துடன், அவர்களுக்குத் தங்கக் காசுகளைப் பரிசாக வழங்கியுள்ளது.

அந்நிறுவனத்தின்மீது ஊழியர்கள் வைத்துள்ள நம்பிக்கை, அவர்களின் சேவை மனப்பான்மை போன்றவற்றைப் பாராட்டும் விதமாக சிங்கப்பூரில் 80க்கும் மேற்பட்ட பேரங்காடிகளை வழிநடத்தும் அதன் நிர்வாகத்தினர் இந்த விருதுகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

ஐந்து ஆண்டு சேவையாற்றியோருக்கு 20 கிராம், பத்தாண்டு பணியாற்றியோருக்கு 30 கிராம் எனத் தங்கக் காசுகளின் எடைகள் அமைந்தன.

மேலும், பதினைந்தாண்டுகள் சேவை செய்தோருக்கு 40 கிராமும் இருபதாண்டுகள் பணியில் உள்ளோர் 100 கிராம் எடையுள்ள தங்கக் காசுகளையும் பெற்றுள்ளனர்.

சந்தை நிலவரப்படி, 100 கிராம் தங்கக் கட்டியின் விலை S$18,500 என்று கணிக்கப்படுகிறது.

நீண்டநாள் பணியாற்றியதற்கான சான்றிதழ்களோடு தங்கக் காசுகள் பணியாளர்களுக்கு வழங்கப்படுவது டிசம்பர் 21, 22ஆம் தேதிகளில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

தங்கக் காசுகள் பெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை, அவற்றின் எடை, மதிப்பு போன்ற விவரங்களை ஷெங் சியோங் நிர்வாகம் வெளியிடவில்லை.

கடந்த 2024ஆம் ஆண்டில் அதன் ஊழியர்கள் 444 பேர் நீண்டநாள் சேவை விருதுகளைப் பெற்றனர்.

அவர்களில் 92 பேருக்கு 20 ஆண்டு சேவைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

‘கொவிட்’ பெருந்தொற்று காலத்திலும் சிறப்பாக சேவையாற்றியதற்காக 2021ஆம் ஆண்டில் ஊழியர்களுக்கு 16 மாத ‘போனஸ்’ வழங்கி நிறுவனம் சிறப்பித்தது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்த அதன் மூன்றாம் காலாண்டு நிதிநிலையில் லாபத் தொகை 11.9 விழுக்காடு உயர்ந்து $43.7 மில்லியனை எட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்