சிங்கப்பூரில் தங்க நகை விற்பனை குறைந்தது

சிங்கப்பூரில் தங்க நகை விற்பனை குறைந்தது

2 mins read
விலை ஏற ஏற விற்பனை மந்தமாகவே இருக்கும் என எதிர்பார்ப்பு
23ae8583-15d3-4339-983f-42ab0b2dd521
தங்கக் கட்டிகள், நாணயங்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு தங்க நகை விற்பனை 13 விழுக்காடு சரிந்தது.

மற்ற நாடுகளிலும் தங்க நகைகளுக்கான தேவை கடந்த 2024ஆம் ஆண்டைவிட 2025ல் 18 விழுக்காடு குறைந்தது.

தங்கத்தின் விலை தொடர்ந்து கூடி வருவதால் தங்க நகைகளுக்கான தேவை தொடர்ந்து மந்தமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், தங்க நகைகளுக்கான தேவையின் மொத்த மதிப்பு 18 விழுக்காடு கூடி, 172 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. இது, விலை ஏறினாலும் தங்கத்தை மதிப்புமிக்க பொருளாகப் பயனீட்டாளர்கள் காண்பதைக் குறிக்கிறது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி, ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை $212.10ஆக இருந்தது.

தங்க முதலீட்டில் ஆர்வம்

இதனிடையே, விலையேற்றத்திற்கு இடையிலும் கடந்த 2025ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு முன்னில்லாத அளவை எட்டியது.

குறிப்பாக, தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள் போன்றவற்றில் முதலிடுவதில் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

அந்த அளவானது கடந்த 2024ஆம் ஆண்டைவிட 48 விழுக்காடு கூடி, 2025ல் 9.6 டன்னாக உயர்ந்தது.

உலகத் தங்க மன்றம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.

நிலையில்லாத புவிசார் அரசியல் சூழல், பொருளியல் வளர்ச்சி மந்தநிலை போன்ற காரணங்களால் இவ்வாண்டிலும் தங்கத்தில் முதலிடும் போக்கு வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நாணய ஆணையம் 15 டன் தங்கத்தை விற்றது. இதன்மூலம் அதன் மொத்தக் கையிருப்பு 205 டன்னாகக் குறைந்தது என்று உலகத் தங்க மன்ற அறிக்கை கூறுகிறது.

உலகளவில் தங்கத்திற்கான தேவை அதிகரித்தது. அது 5,002 டன் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு, அதன் ஆண்டு மதிப்பு 555 பில்லியன் அமெரிக்க டாலராக (S$701 பில்லியன்) உயர்ந்தது.

அதுபோல, தங்க முதலீடு 2,175 டன்னாக உயர்ந்து, புதிய சாதனை படைத்தது. குறிப்பாக, தங்கத்திற்கான சந்தை வணிக நிதியத்தில் (ETF) 2025ஆம் ஆண்டு மேலும் 801 டன் தங்கம் சேர்ந்தது.

முன்னிலையில் சீனா, இந்தியா

சென்ற ஆண்டு தங்கக் கட்டிக்கும் நாணயத்திற்குமான தேவை 1,374 டன்னாக, அதாவது 154 பில்லியன் டன்னாக உயர்ந்தது. அதில் சீனாவும் இந்தியாவுமே இரு பெருஞ்சந்தைகளாக விளங்கின.

தங்கக் கட்டிகள், நாணயங்களுக்கான தேவை சீனாவில் 28 விழுக்காடு கூடிய நிலையில், இந்தியாவில் அந்த உயர்வு 17 விழுக்காடாகப் பதிவானது.

அதுபோல, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் தங்கத்தில் முதலீடு செய்தது இரட்டை இலக்க வளர்ச்சி கண்டது. மாறாக, வியட்னாமில் மட்டும் அது 14 விழுக்காடு குறைந்தது.

முதன்முறையாக, ஓர் அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கத்தின் விலை நடப்பு ஜனவரி மாதத்தில் 5,000 அமெரிக்க டாலரைத் தாண்டியது. நிலையில்லாத பொருளியல் சூழலில் தங்கமெ பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதை இது காட்டுகிறது என்று உலகத் தங்க மன்றத்தின் மூத்த சந்தையியல் பகுப்பாய்வாளர் லூயி ஸ்திரீட் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்