தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோல்டன் மைல் டவரை மறுசீரமைக்கக் கூடுதல் நிலம் வழங்கப்படுகிறது

2 mins read
0f012ea1-bc30-46e9-9f8b-b16e686516a5
கோல்டன் மைல் டவர் கட்டடம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பீச் ரோட்டில் உள்ள கோல்டன் மைல் டவர் கட்டடத்தை மறுசீரமைக்கத் திட்டமிட்டு இருப்பதால் அதன் மேம்பாட்டாளர்களுக்கு நகர மறுசீரமைப்பு ஆணையம் கூடுதல் நிலத்தை வழங்கத் தயாராக உள்ளது.

இக்கட்டடத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க திரையரங்கு அமைந்துள்ள அங்கத்தைப் பாதுகாக்கும் எண்ணம் இருக்கும் பட்சத்தில் கூடுதல் நிலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர மறுசீரமைப்பு ஆணையம் சொத்து மேம்பாட்டாளர்களுக்குக் கூடுதல் நிலம் வழங்குவது அரிதான ஒன்று என நம்பப்படுகிறது.

கோல்டன் மைல் டவரின் விற்பனை நடவடிக்கை நடந்துவரும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது

சில்லறை வர்த்தகக் கடைகள், வாகன நிறுத்துமிடம் உள்ள ஆறு தளங்கள், அவற்றுக்கு மேல் அலுவலகங்கள் இருக்கும் 18 தளங்கள் ஆகியவை ஸ்ட்ராட்டா (strata) ரக சொத்தான கோல்டன் மைல் டவரில் அமைந்துள்ளன.

வாகன நிறுத்துமிடம் இருக்கும் கட்டடத்தின் அங்கத்தில்தான் திரையரங்கம் அமைந்துள்ளது.

அண்மைக் காலமாக நகர மறுசீரமைப்பு ஆணையம், கோல்டன் மைல் டவருக்கு அருகே அமைந்துள்ள கோல்டன் மைல் காம்பிளெக்ஸ் போன்ற ஸ்ட்ராட்டா ரகக் கட்டடங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஆணையம் கோல்டன் மைல் டவர் மறுசீரமைப்புக்குக் கூடுதல் நிலத்தை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோல்டன் மைல் காம்பிளெக்சைப் பாதுகாக்க முடிவு செய்யப்பட்டது.

அதைப் புதுப்பிக்கக் கூடுதல் நிலம் போன்ற அனுகூலங்கள் வழங்கப்பட்டன.

கோல்டன் மைல் டவரை 48,871.2 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட கட்டடமாகப் புதுப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அதன் விற்பனை முகவரான ஏனா டான் திங்கட்கிழமையன்று (ஜனவரி 6) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். குறைந்தபட்சம் அதிலுள்ள திரையரங்கையாவது தொடர்ந்து செயல்படுத்துவதே அதற்கான நிபந்தனை என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது கோல்டன் மைல் டவர் 38,953.72 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கிறது. அதில் 25 விழுக்காடு அளவில் கூடுதல் நிலத்தை நகர மறுசீரமைப்பு ஆணையம் வழங்கத் தயாராய் உள்ளது.

குறிப்புச் சொற்கள்