நம்பிக்கையுடன் காத்திருந்த சிறுவனுக்கு நல்வாய்ப்பு

பதிவுகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டதால் மகிழ்ச்சி

நம்பிக்கையுடன் காத்திருந்த சிறுவனுக்கு நல்வாய்ப்பு

2 mins read
39f3ed8e-9048-4be5-af97-bb05f7e5fc00
வேண்டுதலை வெற்றிகரமாக முடித்த மகிழ்ச்சியுடன் காணப்படும் கௌரவ் ஆர்யன் ஜெகதீஸ்வரன், 13. - படம்: யோகேஸ்வரி

ஆறு வயது முதல் பால்குடம் எடுத்து வந்த கௌரவ் ஆர்யன் ஜெகதீஸ்வரன், கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வை வெற்றிகரமாக முடித்ததற்காக இந்த ஆண்டு, பால்காவடி எடுக்க உறுதியுடன் இருந்தார்.

ஜனவரி 27ல் தைப்பூச ஊர்வலத்திற்கான அனுமதிச்சீட்டைப் பெற 13 வயது கௌரவின் தாயார் இணையத்தளம் வழியாகப் பதிவு செய்ய முயன்றபோது அந்த இணையத்தளம் திடீரெனச் செயலிழந்ததாக அவர் கூறினார்.

அனுமதிச்சீட்டுக்குப் பதிவு செய்வதற்கான இணையத்தளம், ஜனவரி 27ல் எதிர்பாராமல் மூடப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) காலை முதல் சனிக்கிழமை நண்பகல் 12 மணி வரை பால்குடங்களுக்கு பக்தர்கள் கோயிலுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நம்பிக்கை இழக்காமல் காத்திருந்த கௌரவ் அந்த வாய்ப்பால் மகிழ்ந்தார். வெள்ளிக்கிழமை, சிராங்கூன் ரோட்டிலுள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்குச் சென்ற அவரது தாயார், வெற்றிகரமாகப் பால்காவடிக்குப் பதிவு செய்தார்.

மகிழ்ச்சி அடைந்த கௌரவ், “இது எனக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு வாய்ப்பாகக் கருதுகிறேன். தொடக்கத்தில் நான் கொண்ட கவலை தீர்ந்துவிட்டது,” என்று கூறினார்.

தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலை அடைந்த மகிழ்ச்சியில் 13 வயது கௌரவ் ஆர்யன் ஜெகதீஸ்வரன். 
தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலை அடைந்த மகிழ்ச்சியில் 13 வயது கௌரவ் ஆர்யன் ஜெகதீஸ்வரன்.  - படம்: யோகேஸ்வரி

முதன்முறையாகப் பால்காவடி சுமந்த கௌரவ், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) அதிகாலை 5.15 மணியளவில் பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டு, காலை 6.30 மணிக்குள் தேங் ரோட்டிலுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலைச் சென்றடைந்தார்.

கிட்டத்தட்ட 3 கிலோ எடை கொண்ட பால்காவடியை எளிதாகச் சுமக்க முடிந்தது என்று கௌரவ் குறிப்பிட்டார். ஏறத்தாழ 3.5 கிலோமீட்டர் நடந்த அவர், “அதிகாலையில் நடந்தபோது சூரிய வெப்பமின்றி, குளிராக, காற்றோட்டமாக இருந்தது,” என்றார்.

“போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகளுக்குமுன் நின்று காத்திருந்தபோது தோளில் காவடியின் கனத்தை உணர்ந்தேன். இருந்தபோதும் அதனைப் பொறுத்துக்கொண்டு வேண்டுதலில் கவனம் செலுத்தினேன்,” என்று கௌரவ் கூறினார்.

“நம்பிக்கையுடன் நிமிர்ந்து நடந்தால் சிறப்புமிக்க இடங்களுக்குச் செல்லலாம்,” எனத் தம் தாயார் அடிக்கடி கூறுவாரெனக் குறிப்பிட்ட கௌரவ், வெற்றிகரமாகத் தமது வேண்டுதலை முடிக்கத் துணைநின்ற பெற்றோர் இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.

முதலில் காவடிக்கான அனுமதிச்சீட்டு கிடைக்காதபோது, மற்ற கோயில்களில் காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்ய நினைத்ததாக அவரின் தாயார் யோகேஸ்வரி தெரிவித்தார்.

“ஆனால், தெண்டாயுதபாணி கோயிலுக்குத்தான் போகவேண்டும் என்று என் மகன் உறுதியுடன் கூறியது வியப்பில் ஆழ்த்தியது. அவருடைய வேண்டுதலை மதித்து வெள்ளிக்கிழமை காலையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று விண்ணப்பித்தேன். இப்போது நாங்கள் பெருமகிழ்ச்சியில் இருக்கிறோம்,” என்று திருவாட்டி யோகேஸ்வரி கூறினார்.

குறிப்புச் சொற்கள்