புகைமூட்டச் சட்டத்தில் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் திட்டம்

புகைமூட்டச் சட்டத்தில் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் திட்டம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Oct 2026 - 7:49 pm

2 mins read

சிங்கப்பூர் அதன் எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்கவிருப்பதாக மூத்த அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

நவம்பர் 3ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அப்போது புகைமூட்டச் சட்டத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்படும் என்று தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு சண்முகம் தெரிவித்தார்.

உள்நாட்டு நெருக்கடிநிலை குறித்த அமைச்சர்நிலைக் குழுவின் தலைவருமான திரு சண்முகம், புகைமூட்டத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பத்து நிறுவனங்களின் நிர்வாகிகளைப் புதன்கிழமை (அக்டோபர் 28) நேரில் சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசும் மூத்த அமைச்சர் கா. சண்முகம்.
செய்தியாளர்களிடம் பேசும் மூத்த அமைச்சர் கா. சண்முகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அவருடன் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஆகியோரும் நிர்வாகிகளைச் சந்தித்தனர்.

கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு சண்முகம், இந்தோனீசியாவில் உள்ள காட்டுத்தீச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாகவோ அவற்றுடன் தொடர்புடையதாகவோ சந்தேகிக்கப்படும் நிறுவனங்களுக்கு அதிகாரபூர்வ உத்தரவு வழங்க தேசியச் சுற்றுப்புற அமைப்பிற்குச் சட்டத் திருத்தங்கள் மூலம் அதிகாரம் வழங்கப்படும் என்று விளக்கம் அளித்தார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மதிப்பீட்டாளர்களையும் நியமிக்கும்படி அமைப்பு உத்தரவிடலாம். அத்தகைய உத்தரவுக்கு இணங்க மறுப்பது குற்றமாகக் கருதப்படும் என்றார் அவர்.

தற்போது, குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாடுகள், அவற்றின் வர்த்தக உறவுகள், விநியோகத் தொடர்கள் ஆகியவற்றை ஆராய்வதற்கான மதிப்பீட்டாளரை நியமிக்கும்படி நிறுவனங்களிடம் கூறுவதற்கு எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தின்கீழ் தேசியச் சுற்றுப்புற அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

அதன் விளைவாக, புகைமூட்டம் தொடர்பான தகவல்களைத் திரட்டவும் அவற்றை விசாரிக்கவும் தேசியச் சுற்றுப்புற அமைப்பு சிக்கலை எதிர்கொள்கிறது. மேலும், அமலாக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.

இருப்பினும், சட்டத் திருத்தங்கள் நடப்புக்கு வந்தால், புகைமூட்டத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் நிறுவனங்கள், அவற்றின் தகவல்களையும் ஆவணங்களையும் மதிப்பீட்டாளர்கள் பெற்றுக்கொள்ள முழு அனுமதி வழங்கவேண்டும்.

அத்துடன், தேவை ஏற்பட்டால் நிறுவனங்கள் செயல்படும் இடங்களையும் வசதிகளையும் அமைப்பால் அணுக முடியும்.

நிறுவனங்களின் செயல்பாடுகள், வர்த்தக உறவுகள், விநியோகத் தொடர்கள் ஆகியவற்றையும் மதிப்பீட்டாளர்கள் ஆராய அதிகாரம் வழங்கப்படும்.

சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படுவதும் அந்த நிறுவனங்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளனவா, பங்களிக்கின்றனவா என்பதை மதிப்பீட்டாளர்கள் உறுதிசெய்ய முற்படுவர்.

மதிப்பீட்டளர்கள் தங்கள் அறிக்கையைப் பின்னர் தேசியச் சுற்றுப்புற அமைப்பிடம் சமர்ப்பிப்பர்.

மதிப்பீட்டாளருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க மறுப்பதும் சட்டத் திருத்ததிற்குப்பின் குற்றமாகக் கருதப்படும்.

புகைமூட்டச் சட்டத்தின்கீழ் அதிகாரபூர்வ உத்தரவு இன்றி மதிப்பீட்டாளரை நிறுவனங்கள் கூடிய விரைவில் சுயமாக நியமிப்பது பெரிதும் வரவேற்கப்படுவதாக மூத்த அமைச்சர் சண்முகம் நிறுவனப் பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாகச் சொன்னார்.

மதிப்பீட்டாளர் நடைமுறையைத் தன்னிச்சையாக மேற்கொள்ள முன்வரும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பெயர்களும் நிறுவனங்களின் பெயர்களும் அறிவிக்கப்படும் என்ற அவர், சிங்கப்பூரர்களுக்கு நடைமுறையின் நிலவரம் குறித்து அரசாங்கம் தகவல் அளிக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்