தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்குறையுள்ளோர் பெரியவர் ஆன பிறகும் உதவ அரசாங்கம் ஆலோசனை

2 mins read
d5f9e1bc-7510-47d8-a1a7-d77cc570b76f
எஸ்பிடி அமைப்பின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங் (இடமிருந்து நான்காவது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடற்குறையுள்ளோரில் சிலருக்கு 18 வயதானதும் சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகளில் கல்வி முடித்தவுடன் வேலை கிடைப்பது சவாலாக இருந்து வருகிறது.

அத்தகையோர் சுமுகமான முறையில் வேலையில் சேர வகைசெய்யும் வழிமுறைகளை அரசாங்கம் ஆராய்கிறது. அதேபோல் தொடர்ந்து கல்வி பயில விரும்புவோருக்கு ஆதரவளித்து கைகொடுக்கவும் அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 28) தெரிவித்தார்.

குடும்பங்களில் இருப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதோடு சமூகம் மூப்படைந்துவரும் வேளையில் உடற்குறையுள்ளோரின் பராமரிப்பாளர்களுக்குக் கூடுதல் உதவி வழங்குவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசிப்பதாக திரு வோங் குறிப்பிட்டார்.

எஸ்பிடி (SPD) எனும் உடற்குறையுள்ளோருக்கான நன்கொடை அமைப்பின் 60ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் திரு வோங் பேசினார். உடற்குறையுள்ளோர் தங்களின் முழு ஆற்றலை அறிந்து சுயமாக வாழ கூடுதல் முயற்சி எடுக்கப்படவேண்டும் என்றும் பிரதமர் சொன்னார்.

அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தை உருவாக்குவதில் சிங்கப்பூர் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தாலும் இதன் தொடர்பில் கூடுதல் முயற்சி எடுப்பதன் அவசியத்தைப் பிரதமர் சுட்டினார்.

குடும்பங்களில் இருப்போரின் எண்ணிக்கை குறையும்போது குடும்பத்தாரைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறையும். அதேபோல், சமூகம் மூப்படையும் வேளையில் தங்களுக்கும் தாங்கள் கவனிக்கும் உடற்குறையுள்ள அன்புக்குரியவர்களுக்கும் வயதாகும்போது பராமரிப்பாளர்கள் மாறும் தேவைகளுக்குத் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் திரு வோங் சுட்டினார்.

“அதனால்தான் உடற்குறையுள்ளோருக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் கூடுதல் உதவி வழங்குவது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். தங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும் இலக்குகள், ஆசைகளை அடைவதற்கும் திட்டமிடுவது, மாறும் காலகட்டத்துக்கும் வாழ்க்கைச் சூழலுக்கும் ஏற்றவாறு அத்திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்வது ஆகியவற்றுக்கு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது நோக்கமாகும்,” என்று பேன் பசிபிக் சிங்கப்பூர் (Pan Pacific Singapore) ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு வோங் குறிப்பிட்டார்.

ஆரம்பகால குறுக்கீடு (early intervention) போன்ற அம்சங்களைப் பொறுத்தவரை உடற்குறையுள்ளோருக்கு மேலும் அதரவு வழங்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பற்றியும் பிரதமர் வோங் விளக்கினார். உதாரணமாக, அரசாங்க நிதியுதவியுடன் இயங்கும் ஆரம்பகால குறுக்கீட்டுத் திட்டங்களில் கூடுதலான சிறுவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இடங்கள் அதிகரிக்கப்படுகின்றன. மேலும், சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் நிபுணத்துவ திறன்களையும் ஆற்றலையும் மேம்படுத்த கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்