வாடகை வாகனச் சேவைகளை வழங்கிவரும் கிராப் நிறுவனத்துக்கு டாக்சிகளை இயக்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கிராப், சிங்கப்பூரின் ஆறாவது டாக்சி நிறுவனமாக உருவெடுக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் இந்த டாக்சி உரிமம், இம்மாதம் ஒன்பதாம் தேதி நடப்புக்கு வரும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தது.
டாக்சி உரிமம், கிராப் நிறுவனத்தின் வாடகைச் சேவைப் பிரிவான கிராப்ரென்டல்சுக்குச் (GrabRentals) சொந்தமான கிராப்கேபுக்கு (GrabCab) வழங்கப்பட்டுள்ளது.
டாக்சி சேவை வழங்க குறைந்தது 800 டாக்சிகளை வைத்திருப்பது கட்டாயம்; அதற்கேற்றவாறு தங்கள் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டம் கட்டமாக அதிகரிக்க கிராப்கேபுக்கு மூவாண்டு அவகாசம் வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
டாக்சி உரிமத்தின்கீழ், மக்கள் முன்பதிவின்றி சாலையில் கிராப் வாகனங்களை நிறுத்திக்கொள்ள முடியும். கிராபுக்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பதால் ஓட்டுநர்கள், பயணிகள் இரு தரப்பினருக்கும் கூடுதல் தெரிவுகள் இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.
டாக்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு உரிமம் உதவும் என்றும் அது சுட்டியது.
உரிமத்தின் நிபந்தனைகளை கிராப்கேப் பூர்த்திசெய்யவேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது. ஆணையத்தின் பாதுகாப்பு விதிமுறைகளும் பூர்த்திசெய்யப்படவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, கிராபின்கீழ் மட்டும் சேவைகளை வழங்கும் வகையில் ஓட்டுநர்களுக்கான ஒப்பந்தங்கள் வரையப்படக்கூடாது என்று ஆணையம் தெரிவித்தது.
முன்பதிவின்றி சாலைகளில் டாக்சி எடுக்கும் பயணிகளுக்குத் தங்கள் டாக்சிகள், எளிதில் அடையாளம் காணப்படக்கூடியவையாக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் டாச்கிகளின் மேல் டாக்சிகளுக்கான பதாகை வைக்கப்படவேண்டும்.
கிராப்கேபின் வாகனங்கள் ஆணையத்தின் அனுமதி பெற்றிருக்கவேண்டும். பொதுவாக எல்லா டாக்சிகளுக்கும் நடப்பில் இருக்கும் விதிமுறைகளை கிராப் பின்பற்றவேண்டும்.
கிராப், ஏற்கெனவே டாக்சி துறையில் நுழைய முயற்சி செய்தது. கடந்த 2023ஆம் ஆண்டு அந்நிறுவனம், டிரான்ஸ்கேப் டாக்சி நிறுவனத்தை வாங்க முயற்சி செய்தது.
சிங்கப்பூரின் போட்டித்தன்மை ஆணையம் அதற்கு எதிராகத் தீர்ப்பளித்த பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டது.