ரிவர் வேலி கடைவீட்டில் ஏப்ரல் 8ஆம் தேதி மூண்ட தீயைக் கண்டதும் வெளிநாட்டு ஊழியர்கள் வேகமாகச் செயல்பட்டதால் ஒரு பத்து வயது சிறுமியைத் தவிர மற்ற அனைவரும் உயிர் பிழைத்தனர்.
கிட்டத்தட்ட 15 வெளிநாட்டு ஊழியர்களின் செயல்களைப் பாராட்டவும் நேரில் கண்டு நன்றி தெரிவிக்கவும் மக்களுக்கு வாய்ப்பளித்தது ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) பிற்பகல் ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ அறநிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி.
வெளிநாட்டு ஊழியர்களுக்கன அறநிறுவனம் ஹெண்டர்சன் சாலையில் வைத்துள்ள கடையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி விடுமுறையை முன்னிட்டு டொமேட்டோ சமையல் பள்ளி ஐந்து நாள்கள் நடத்திய சமையல் வகுப்பில் தம் ஆறு வயது மகளைச் சேர்த்த லியூ லிங், 47, தீயில் தம் பிள்ளை சிக்கிக்கொண்டதைக் கேள்வியுற்றதும் நிலைகுலைந்துபோனார்.
வெளிநாட்டு ஊழியர்களின் செயலால் தம் மகள் காப்பாற்றப்பட்டார் எனத் தெரிந்த பின்பே அவருக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
“என் மகளைக் கட்டடத்திலிருந்து மீட்டபோது அவள் அசைவின்றி இருந்ததாக வெளிநாட்டு ஊழியர்கள் கூறினர். என் மகள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவளுடைய உயிரைக் காக்க இந்தியா, பங்ளாதேஷிலிருந்து பல நாயகர்கள் தக்க சமயத்தில் வந்தனர்,” என்றார் லியூ லிங்.
அவர்களுக்கு நன்றிகூறுவதற்காக தம் மகளையும் அழைத்து வந்திருந்தார் லியூ லிங். அவருடைய மகளின் காதில் கட்டு இருந்ததே தவிர, மற்றபடி எந்தக் காயமும் தென்படவில்லை.
“இத்தகைய ஒரு தீச்சம்பவம் சிங்கப்பூரில் நடக்கும் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை,” என்றார் லியூ லிங்.
தொடர்புடைய செய்திகள்
அவரைப்போல பாதிக்கப்பட்ட பெற்றோர், நண்பர்கள் பலரும் ஒன்றாக இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு பண உறைகள், பலகாரங்கள் போன்றவற்றை வழங்கி நன்றி தெரிவித்தனர்.
“இந்த நாயகர்கள் இல்லாவிட்டால் இப்பொழுது எங்கள் மகள் எங்களுடன் இருந்திருக்கமாட்டார்,” என்றனர் விக்டர் ஓர்டன்ஸ் - ரபெக்கா தம்பதியர்.
அந்தக் கடைவீட்டின் அருகே வசிக்கும் மோனிக்கா மில்லிங்டன், 34, நேரடியாகப் பாதிப்படையாவிட்டாலும் தாமும் ஓர் இளம் தாயார் என்பதால் பெற்றோரின் வலியை உணர்ந்தார். அவர் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புத்தாடைகள் வழங்கி மகிழ்ந்தார்.
“நாங்கள் காப்பாற்றிய குழந்தைகளை நேரில் கண்டு மகிழ்ந்தபோதிலும் அந்த பத்து வயதுச் சிறுமியைக் காப்பாற்றமுடியவில்லையே என்ற வருத்தம் எங்களுக்கு உண்டு,” என்றார் ஓட்டுநர் வருவேல் கிறிஸ்டோபர், 56.
இந்த வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ நடத்திய நிதி திரட்டு மே 1ஆம் தேதி முடிவடைந்தது. அதில் திரட்டப்பட்ட நிதி அவர்களுக்குச் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படும்.
இதற்கு முன் அவர்களுக்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை சமூக உயிர்க்காப்பாளர் விருது வழங்கப்பட்டிருந்தது.
மறக்கமுடியாத சம்பவம்
சாலைப் பணியாளர் சின்னப்பா கண்ணதாசன், 32, தீச்சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
“ஆசிரியர்களும் சிறுவர்களும் உதவிகோரி அலறினர். கட்டுமான ஊழியர்கள் சிலர் தம் பணியிடத்திலிருந்து சாரக்கட்டு ஒன்றை உடனே எடுத்து வந்தனர்,” என்றார் அவர்.
சாரக்கட்டுமீது வைக்கப்பட்ட ஏணியில் ஏறி சன்னலிலிருந்து சிறுவர்களை ஒவ்வொருவராக மீட்டு கீழே இருந்த சக ஊழியர்கள் ஹசான் இமாமுல், ஷகில் முகமது ஆகியோரிடம் ஒப்படைத்தார் கண்ணதாசன்.
“என் உயிர் போனாலும் பரவாயில்லை. அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருந்தேன்,” என்றார் ஷகில் முகமது.

