தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரேட்டர் சவுத்தர்ன் நீர்முகப்பு, மவுன்ட் பிளெசன்ட் பிடிஓ வீடுகள் விற்பனை

2 mins read
b236f6b3-0321-44fd-8361-bb9dd087e892
கிரேட்டர் சவுத்தர்ன் நீர்முகப்புப் பகுதியில் கட்டப்படும் பிடிஓ வீடுகளைச் சித்திரிக்கும் ஓவியம். - வரைகலை: வீவக

புதிய வீடமைப்பு வட்டாரங்களான கிரேட்டர் சவுத்தர்ன் நீர்முகப்பு (Greater Southern Waterfront), மவுன்ட் பிளெசன்ட் ஆகியவற்றில் அமையும் விருப்பத்துக்கேற்பக் கட்டப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் (பிடிஓ வீடுகள்) வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு விடப்படும்.

அக்டோபரில் விற்பனைக்கு விடப்படவுள்ள 10 பிடிஓ திட்டங்களில் இவ்விரு வட்டாரங்களில் அமையும் வீடுகளும் அடங்கும். அங் மோ கியோ, பிடோக், புக்கிட் மேரா, ஜூரோங் ஈஸ்ட், செங்காங், பீ‌ஷான், தோ பாயோ, ஈசூன் ஆகியவற்றில் கட்டப்படும் சுமார் 9,100 வீடுகளை வீவக விற்பனைக்கு விடும்.

தெலோக் பிளாங்கா ரோட்டில் முன்பு கெப்பல் கிளப் மன்றம் இருந்த புக்கிட் மேரா பகுதியில் கட்டப்படும் திட்டத்தில் மொத்தமாக கிட்டத்தட்ட 870 மூவறை, நான்கறை, நீக்குப்போக்கான குத்தகையுடைய ஈரறை வீடுகளும் ஒரு பாலர்பள்ளியும் இடம்பெறும். அந்த வீடுகள் உள்ள புளோக்குகள் 19லிருந்து 46 தளங்களைக் கொண்டிருக்கும். அந்த புளோக்குகளில் ஒன்றில் வாடகை வீடுகள் இடம்பெறும்.

இந்த பிடிஓ திட்டம் திலோக் பிளாங்கா, லேப்ரடோர் பெருவிரைவு ரயில் நிலைங்களுக்கு நடுவில் அமையும்.

இது, கிரேட்டர் சவுத்தர்ன் நீர்முகப்பு வட்டாரத்தின் தொடக்கமாக இருக்கும். கிரேட்டர் சவுத்தர்ன் நீர்முகப்புப் பகுதியில் கட்டப்படவுள்ள 6,000 வீவக வீடுகள், 3,000 தனியார் வீடுகளில் இத்திட்டம் அங்கம் வகிக்கிறது.

முன்பு கெப்பல் கிளப் மன்றம் இருந்த பகுதியில் அமையும் பிடிஓ திட்டம், முதன்மை (Prime) வீடமைப்புப் பிரிவில் இடம்பெறக்கூடும் என்று சொத்து கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். நகரின் மத்திய வட்டாரப் பகுதியில் இத்திட்டம் அமைந்திருப்பதும் பலர் விருப்பம் தெரிவிக்கக்கூடும் என்பதும் அதற்கான காரணங்கள்.

புக்கிட் மேராவில் கட்டப்படும் மற்றொரு பிடிஓ திட்டம், ஜாலான் புக்கிட் மேரா மற்றும் ரெட்ஹில் குளோஸ் பகுதிகளில் அமையும் 1,020 வீடுகளைக் கொண்டுள்ள திட்டமாகும். அங்கிருந்து ரெட்ஹில் பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு 10 நிமிடங்களில் நடந்து போகலாம்.

இத்திட்டமும் முதன்மை வீடமைப்புப் பிரிவில் வரும் என்று கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். உணவங்காடிகள், காப்பிக் கடைகள், பலதுறை மருந்தகம் போன்றவை திட்டத்துக்கு அருகே அமைவது அதற்குக் காரணம்.

தோ பாயோவின் புதிய மவுன்ட் பிளெசன்ட் வீடமைப்பு வட்டாரத்தில் 1,350 வீடுகளைக் கொண்டுள்ள பிடிஓ திட்டம் கட்டப்படவுள்ளது. மவுன்ட் பிளெசன்ட், தாம்சன் ரோட்டில் இது அமைந்துள்ளது.

பழைய காவல்துறைப் பயிற்சிக் கழகம் இருந்த 33 ஹெக்டர் பரப்பளவுகொண்ட பகுதியில் அமையவிருக்கும் ஆறு புதிய பிடிஓ திட்டங்களில் முதல் திட்டமான இதற்கு, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் பாதையில் கட்டப்பட்டுவரும் மவுன்ட் பிளெசன்ட் நிலையத்திலிருந்து ஐந்து நிமிடங்களில் நடந்து போகலாம்.

இத்திட்டமும் முதன்மைப் பிரிவில் இடம்பெறும் என்பது கவனிப்பாளர்களின் எதிர்பார்ப்பு.

குறிப்புச் சொற்கள்