தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு $850 வரை ரொக்கம், $450 வரை மெடிசேவ் நிரப்புத் தொகை

தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு $850 வரை ரொக்கம், $450 வரை மெடிசேவ் நிரப்புத் தொகை

3 mins read
உதவித்தொகை வழங்கப்படும் முன்பாக குறுஞ்செய்தி வழியாக தகவல் அனுப்பப்படும்
95194231-da2e-45f8-b03f-d8b166f084f1
ஒருவர் செலுத்தும் வருமான வரி, வாழும் இல்லம் ஆகிய இரண்டின் ஓராண்டு மதிப்பை வைத்து உதவித் தொகை வழங்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் பேர், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் (GSTV) திட்டத்தின்கீழ் $850 வரை ரொக்கம் பெறவுள்ளனர்.

மேலும் 710,000க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களது மெடிசேவ் கணக்குகளில் $450 வரை நிரப்பப்படும். இந்த இரண்டு உதவிகளும் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும்.

2025ஆம் ஆண்டுக்கான ஒருவர் செலுத்தவேண்டிய (மதிப்பிடப்பட்ட) வருமான வரித் தொகை, அவர் வாழும் வீட்டின் ஓராண்டுக்கான விலைமதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து ரொக்கத் தொகை வழங்கப்படும்.

இதன் விவரங்களை நிதி அமைச்சு வியாழக்கிழமை (ஜூலை 9) அறிவித்தது.

வயது, வாழும் வீட்டின் ஆண்டு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தகுதிபெறும் மூத்த குடிமக்கள் அவர்களது மெடிசேவ் கணக்குகளில் $150 முதல் $450 வரை பெறுவர். இத்திட்டத்தில் இதற்கு முன்பாக இணைந்திருந்தால், அந்தத் தொகை அவர்களது கணக்குகளில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் தானியக்க முறையில் நிரப்பப்படும்.

இதுவரை திட்டத்தில் பதிவுசெய்யாத சிங்கப்பூரர்கள் ஜூலை 14ஆம் தேதிக்குள் அதைச் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு செய்தால்தான் ஆகஸ்ட் மாதத்தில் மெடிசேவ் நிரப்புத்தொகையைப் பெறலாம். அவர்கள் இதற்கு தகுதிபெறுகிறார்களா என்பதை இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

மேலும், அடையாள அட்டையுடன் ‘பேநவ்’ (PayNow) கட்டண முறையை ஜூலை 28ஆம் தேதிக்குள் இணைத்துக்கொள்ளும்படி சிங்கப்பூரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்துகொண்டால், ஜிஎஸ்டிவி ரொக்கத் தொகை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் அவர்களது கணக்குகளில் சேர்க்கப்படும்.

உதவித்தொகைகள் அவரவர் கணக்குகளில் வழங்கப்படுவதற்கு முன்னதாக அதிகாரபூர்வ குறுஞ்செய்திகளின் (எஸ்எம்எஸ்) வழியாக தகுதிபெறுவோருக்குத் தகவல் அனுப்பிவைக்கப்படும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சிங்பாஸ் மறைச்சொல் இல்லாத கைப்பேசிகளைக் கொண்டவர்களுக்கு அவர்களது அடையாள அட்டையில் பதிவுசெய்யப்பட்ட முகவரியில் உள்ள இல்லங்களுக்கு அஞ்சல் வழியாகக் கடிதம் அனுப்பிவைக்கப்படும்.

மொத்தம் $1.4 பில்லியன் மதிப்புள்ள ரொக்கம், நிரந்தர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு 2026 திட்டத்தின்படி சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அத்திட்டத்தில் ரொக்கம், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டம், மெடிசேவ் திட்டம் ஆகியன அடங்கும்.

இந்நிலையில் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கவும் நிதிச்சுமையைக் குறைக்கவும் அரசாங்கம் வழங்கவுள்ள இந்த இரண்டு தொகைகள் உதவியாக இருப்பதாகச் சிலர் கூறியுள்ளனர்.

தன் மனைவிவுடன் ராஜசேகரன் பிரகாசம், 66.
தன் மனைவிவுடன் ராஜசேகரன் பிரகாசம், 66. - படம் : ராஜசேகரன் பிரகாசம்.

மூத்த குடிமக்களுக்குக் கட்டுப்படியாகும் செலவில் மருத்துவச் சிகிச்சை கிடைக்க இந்த மெடிசேவ் நிரப்புதொகை உதவுவதாகக் கட்டுமானத் துறை ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றும் 66 வயது ராஜசேகரன் பிரகாசம் தெரிவித்தார்.

“உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, கல்லீரல் கொழுப்பு உள்ளிட்ட நோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு வருகிறேன். மருத்துவமனையில் அடிக்கடி பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் எனக்கும் மருத்துவச் செலவுகள் அதிகமாவதால் இந்த நிரப்புத் தொகை உதவுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அதிகாரி முஹம்மத் சாட் அப்துல் வஹாப்,38.
பாதுகாப்பு அதிகாரி முஹம்மத் சாட் அப்துல் வஹாப்,38. - படம் : முஹம்மத் சாட் அப்துல் வஹாப்

ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு திட்டத்தின் ரொக்கத்தைப் பெறவுள்ள 38 வயது பாதுகாப்பு அதிகாரி முஹம்மத் சாட் அப்துல் வஹாப், தமது குடும்பத்திற்கு இது பேருதவியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும், மெடிசேவ் நிரப்புதொகை எல்லா வயதுப் பிரிவினருக்கும் வழங்கப்பட்டால் மருத்துவச் செலவுகளைக் கையாள இத்தொகை உதவும் என அவர் கருதுகிறார்.

“எனது நான்கு குழந்தைகளில் இருவருக்கு மதியிறுக்கக் குறைபாடுகள் உள்ளன. அதனால், கூடுதல் பராமரிப்புச் செலவுகள் தேவைப்படுகின்றன,” என்று திரு சாட் கூறினார்.

குறிப்புச் சொற்கள்