சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் 2026-2028ஆம் ஆண்டுப் பருவத்திற்கான புதிய செயலவை தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) காலையில் பென்கூலன் பள்ளிவாசல் பன்னோக்கு அரங்கில் பேரவையின் ஆண்டு இறுதிப் பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
தலைவராக பரிஹுல்லாஹ்வுடன் துணைத் தலைவராக காதர் அலி, உதவித் தலைவர்களாக ஜெகபர் சாதிக், நசீர் முஹம்மது, பொதுச் செயலாளராக முஹம்மது அசீம், துணைப் பொதுச் செயலாளராக அப்துர் ரஹ்மான், உதவிப் பொதுச் செயலாளராக இ. எம். சாஹுல் ஹமீது, பொருளாளராக திரு சாஹுல் ஹமீது, உதவிப் பொருளாளராக முஹம்மது ரஷித் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பேரவையின் அரசியலமைப்பு விதியின்படி, தொடர்ந்து இரண்டு தவணைகள் மட்டுமே ஒருவர் தலைமைப் பொறுப்பில் சேவையாற்ற முடியும் என்பதால் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தலைவராகப் பணியாற்றிய அ. முஹம்மது பிலாலின் பதவிக்காலம் நிறைவடைந்தது. அவரது சேவையைப் பாராட்டி மூத்த உறுப்பினரும் ஆசிரியருமான மு. அ. மசூது உரையாற்றினார்.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய முன்னாள் தலைவர் பிலால், தமது பதவிக்காலத்தில் பேரவை அடைந்த வளர்ச்சிகளைப் பகிர்ந்தார். பேரவையின் 30வது ஆண்டு நிறைவு விழா, ‘சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை’ என்ற பெயர்மாற்றம், மலாய், தமிழ் அமைப்புகளுடனான தொடர்புகளை விரிவுபடுத்தியது உள்ளிட்டவற்றை அவர் நினைவுகூர்ந்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பேரவையின் அரசியலமைப்பு விதிகளை மறுஆய்வு செய்து திருத்தம் செய்த சிறப்புக் குழுவினரான திரு உபைதலி, பரிஹுல்லாஹ், முனைவர் முஹைதீன் நிசார் அன்வர், சட்டத்தரணி முஹம்மது ஹஃபீஸ், திரு ஆதம் சாஹுல் ஹமீது ஆகியோருக்குக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
