புதிய முனையத்துக்கு மாறும் ஹார்பர்ஃபிரண்ட் படகுச் சேவைகள்

புதிய முனையத்துக்கு மாறும் ஹார்பர்ஃபிரண்ட் படகுச் சேவைகள்

2 mins read
759365cc-617e-4742-9474-f22e79e9a122
1992ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் தற்போதைய முனையத்திலிருந்து ஏறத்தாழ 70 மீட்டர் தொலைவில், 5 ஹார்பர்ஃபிரண்ட் அவென்யூவில் புதிய முனையம் அமைந்துள்ளது. - படம்: சிங்கப்பூர் குரூஸ் சென்டர்
Google News Preferred Icon

புதிய சிங்கப்பூர் குரூஸ் சென்டர் (ஹார்பர்ஃபிரண்ட்) முனையத்திலிருந்து ‘பாத்தாம் ஃபாஸ்ட் ஃபெரி’ தனது சேவைகளை ஜூலை மாதம் 7ஆம் தேதி முதல் முதன்முதலாகத் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, இதர படகு மற்றும் சொகுசுக் கப்பல் நிறுவனங்கள் ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் புதிய முனையத்துக்கு மாறவிருக்கின்றன.

ஹார்பர்ஃபிரண்ட் சென்டரை ஒரு ஒருங்கிணைந்த பயன்பாட்டுக் கட்டடமாக மறுமேம்பாடு செய்ய அதன் உரிமையாளரான மேப்பல்ட்ரீ இன்வெஸ்ட்மென்ட்ஸ் திட்டமிட்டுள்ளதால் இந்த இடமாற்றம் நடைபெறுகிறது.

1992ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் தற்போதைய முனையத்திலிருந்து ஏறத்தாழ 70 மீட்டர் தொலைவில், 5 ஹார்பர்ஃபிரண்ட் அவென்யூவில் இந்தப் புதிய முனையம் அமைந்துள்ளது.

இந்த மாற்றத்தினால் படகுப் போக்குவரத்துப் பாதைகள், சேருமிடங்கள் மற்றும் பயண அட்டவணைகளில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று சிங்கப்பூர் குரூஸ் சென்டர் திங்கட்கிழமையன்று (ஜூன் 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாத்தாம் சென்டர், செக்குபாங், தஞ்சோங் பாலாய் கரிமுன் உள்ளிட்ட இந்தோனீசியப் பகுதிகளுக்கான படகுச் சேவைகளும் அனைத்துலகச் சொகுசுக் கப்பல் சேவைகளும் வழக்கம்போல் புதிய முனையத்திலிருந்து தொடரும். பயணிகள் எளிதாக வந்து செல்ல, ஹார்பர்ஃபிரண்ட் எம்ஆர்டி நிலையத்தின் ‘பி’ வெளிவாயிலிலிருந்து புதிய முனையத்துக்குத் தங்குதடையற்ற கூரையுள்ள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. புதிய முனையத்தில் வாகன நிறுத்த இடங்கள் மிகவும் குறைவாகவே உள்ளதால், பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு உணவகங்கள் மற்றும் நாணயமாற்று நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் இடம்பெறவுள்ளன.

“இது பயணிகளுக்குத் தடையற்ற மற்றும் திறமையான பயண அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும்,” என்று புதிய முனையம் குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக்குலின் டான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்