‘லைஃப்எஸ்ஜி’ சிறப்புத் தொகையை தாள்வடிவ பற்றுச்சீட்டாகப் பெறலாம்: ஸாக்கி

2 mins read
c53af501-a12e-40a3-a9e8-67166e0de10e
சிறப்புத் தொகை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட முந்தைய, தற்போதைய தேசிய சேவையாளர்களுக்கு அரசாங்க திறன்பேசிச் செயலியான ‘லைஃப்எஸ்ஜி’ மூலம் நவம்பர் மாதம் வழங்கப்பட்டு வருகிறது. - கோப்புப்படம்: தற்காப்பு அமைச்சு

மூத்த குடிமக்கள் தங்களின் கைப்பேசிச் செயலிவழி ‘லைஃப்எஸ்ஜி’ (LifeSG) சிறப்புத் தொகையைப் பெறுவதில் சிரமம் இருந்தாலும் மின்னிலக்கக் கட்டணமுறையைப் பயன்படுத்துவதில் அசௌகரியம் இருந்தாலும் தாள்வடிவில் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள அவர்கள் கோரிக்கை விடுக்கலாம்.

நாடாளுமன்றத்தில் நவம்பர் 13ஆம் தேதி தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது இதனைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் தற்காப்புக்கும் பாதுகாப்புக்கும் தேசிய சேவையாளர்கள் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் $200 மதிப்புடைய சிறப்புத் தொகையைப் பெறத் தகுதிபெற்றவர்களில் 25 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றார் அவர்.

சிறப்புத் தொகை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட முந்தைய, தற்போதைய தேசிய சேவையாளர்களுக்கு அரசாங்க திறன்பேசிச் செயலியான ‘லைஃப்எஸ்ஜி’ மூலம் நவம்பர் மாதம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகையைக் கொண்டு வீட்டுப் பொருள்களையும் வாழ்க்கைமுறைக்குரிய பொருள்கள், சேவைகளையும் வாங்க இயலும்.

மனிதவள மூத்த துணை அமைச்சராகவும் உள்ள திரு ஸாக்கி, 2022ஆம் ஆண்டு இதே செயலிவழி வழங்கப்பட்ட சிறப்புத் தொகை குறித்தும் பேசினார். அந்த ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்ட தேசிய சேவையாளர்களில் 88 விழுக்காட்டினர் தங்களது சிறப்புத் தொகையைப் பயன்படுத்த முடிந்ததாகவும் 2 விழுக்காட்டினர் மட்டுமே தாள்வடிவ பற்றுச்சீட்டைக் கோரிப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பத்தைக் கையாளச் சிரமப்படுவோர் தங்களுக்குரிய சிறப்புத் தொகையைப் பெற அரசாங்கம் எவ்வாறு உதவும் என்று வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியைச் சேர்ந்த திரு அங் வெய் நெங் கேட்ட கேள்விக்கு திரு ஸாக்கி இவ்வாறு பதிலளித்தார்.

மின்னிலக்கக் கட்டணமுறையை இத்தகைய உதவித்தொகைக்காகப் பயன்படுத்தும்போது அதிக மின்னிலக்கத் திறனுடையோருக்கும் அத்திறன் அதிகம் இல்லாதோருக்கும் இடையே பிரிவினை ஏற்படாது எனத் தாம் நம்புவதாக திரு அங் குறிப்பிட்டார்.

அவ்வாறு பிரிவினையை ஏற்படுத்தும் எண்ணம் இல்லை என்று சுட்டிய திரு ஸாக்கி, தற்காப்பு அமைச்சு அல்லது உள்துறை அமைச்சிடம் தாள்வடிவ பற்றுச்சீட்டைக் கோரும் தெரிவு வழங்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்